திருப்பத்தூர் அருகே கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்

திருப்பத்தூர் அருகே கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர். மேலும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-05-02 00:04 GMT
திருப்பத்தூர்,

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் திருப்பத்தூர் அருகே உள்ள கோணாப்பட்டு ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் மகாபாரத கோவிலில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏற்கனவே பொதுமக்கள் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி, துண்டு பிரசுரங்களை வினியோகித்து இருந்தனர்.

அந்த துண்டு பிரசுரத்தில், 9 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஒரு தொட்டியின் மூலமாக மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மற்ற மேல்நிலை தொட்டிகள் குடிநீர் ஆதாரம் இருந்தும் போதிய பராமரிப்பின்றி குடிநீர் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மின்மோட்டாருக்கு மின் இணைப்பு இல்லாமல் இருக்கிறது, தனிநபர் கழிப்பிடம் கட்டிய 150 பயனாளிகளுக்கு பணம் வழங்கப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தது. அதன்படி, ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர்.

இந்த நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் பூட்டு போட்டு பூட்டினர். கிராம சபை கூட்டம் நடைபெறும் இடமான மகாபாரத கோவிலில் ஊராட்சி செயலாளர் வெங்கடேசன், அதிகாரி கோட்டீஸ்வரன் ஆகியோர் வெகுநேரமாக அமர்ந்திருந்தனர். அங்கு வந்த பொதுமக்கள் நாங்கள் யாரும் கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம், நீங்கள் எழுந்து செல்லுங்கள் என கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து அரசு அலுவலர்களும் அங்கிருந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்