அங்கன்வாடி மையங்களுக்கு 5 வயது வரை குழந்தைகளை அனுப்பி வைக்க வேண்டும்

அங்கன்வாடி மையங்களுக்கு 5 வயது வரை குழந்தைகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கந்தசாமி கேட்டுக் கொண்டார்.

Update: 2018-05-01 23:53 GMT
செய்யாறு,

செய்யாறு தாலுகா புளியரம்பாக்கம் கிராமத்தில் மே தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு செய்யாறு உதவி கலெக்டர் கி.அரிதாஸ் (பொறுப்பு) தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அரிகரன், சுகாதார துணை இயக்குனர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். அப்போது கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேசியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்களிடம் எரிவாயு சிலிண்டர் இணைப்பு இல்லை என்கிற நிலைமாற்றி மாவட்டம் முழுவதும் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வழங்கப்படுகிறது.

கிராமத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்கு 5 வயது வரை குழந்தைகளை அனுப்பி வைக்க வேண்டும். அப்போது தான் கல்வி கற்றலுக்கு ஏற்ற சூழ்நிலையில் தமிழ் எழுத்துகள் அறிவுடன் தொடக்க பள்ளிக்கு செல்ல முடியும். தொடக்கக்கல்வி கற்றல் சிறப்பாக இருக்கும். பிறந்த குழந்தை முதல் 2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனைத்து விதமான தடுப்பூசிகள் போடப்படுகிறது.

கிராம சபை கூட்டத்திற்கு சிறப்பு அதிகாரமுண்டு, கிராமத்திற்கு தேவையான வளர்ச்சி பணிகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி நடைமுறைப்படுத்தலாம். மாவட்டத்தில் தன்னிறிவு பெற்ற 61 கிராமங்களில் புளியரம்பாக்கம் கிராமமும் ஒன்று. குழந்தைகளுக்கு கல்வியை கொடுக்க பெற்றோர்கள் முன்வரவேண்டும், எக்காலத்திலும் அழியாத சொத்து கல்வி மட்டும் தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் புளியரம்பாக்கம் கிராமத்தில் குடிநீர் சீராக வினியோகம் இல்லை, குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. ரேஷன் பொருட்களை வாங்கிட 3 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று வருவதால் பகுதி நேர ரேஷன் கடையை திறக்க வேண்டும். தெருவிளக்கு பழுதடைந்துள்ளதை மாற்றி தரவேண்டும். மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நூலகம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதில் செய்யாறு தாசில்தார் மகேந்திரமணி, அ.தி. மு.க. நிர்வாகிகள் டி.பி.துரை, எம்.மகேந்திரன், கே.வெங்கடேசன், எஸ்.கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்