ராஜன்வாய்க்கால் ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
திருத்துறைப்பூண்டி அருகே கொற்கையில் மயானத்துக்கு செல்ல வசதியாக ராஜன்வாய்க்கால் ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே கொற்கை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் தலைக்காடு, கண்ணன்மேடு, சேவியக்காடு, கொற்கை சிறுகொற்கை, மேலகொற்கை உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியை சேர்ந்தவர்கள் யாராவது இறந்து விட்டால் சேவியக்காடு பகுதியில் அடப்பாறு ஆற்றின் கரையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய வேண்டும். அடக்கம் செய்ய செல்லும் வழியில் உள்ள ராஜன்வாய்க்கால் ஆற்றை கடந்து தான் மயானத்துக்கு செல்ல வேண்டும். ராஜன்வாய்க்கால் ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் ஆற்றில் இறங்கி தான் இறந்தவரின் உடலை தூக்கி செல்ல வேண்டும். ஆற்றில் தண்ணீர் உள்ள போதும் இவ்வாறு உடலை தூக்கி சென்று தான் அடக்க செய்ய வேண்டும். இதனால் மயானத்துக்கு செல்ல வசதியாக ராஜன்வாய்க்கால் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சேவியக்காட்டை சேர்ந்த செண்பகவள்ளிஆச்சி என்ற மூதாட்டி உயிரிழந்தார். அவரது உறவினர்கள் மூதாட்டியின் உடலை ஆற்றில் இறங்கி தூக்கி சென்றனர். இறந்தவரின் உடலை ஆற்றுக்குள் இறங்கி தூக்கி செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. எனவே அரசு உடனடியாக இந்த பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ராஜன்வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டி தரவேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.