கூத்தனூரில் கிராம சபை கூட்டம் கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமையில் நடந்தது

மே தினத்தையொட்டி கூத்தனூரில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.;

Update: 2018-05-01 23:00 GMT
 குடவாசல்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள கூத்தனூர் ஊராட்சியில் மே தினத்தையொட்டி நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி பேசினார்.

கிராம சுயராஜ்ய இயக்கம் என்ற திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 7 வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அதன்படி வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு, மானிய விலையில் தரமான எல்.இ.டி. பல்புகள் வழங்கப்பட உள்ளது.

மேலும் மின்சார இணைப்பு இல்லாதவர்களுக்கு இலவச மின்சார இணைப்பு, வங்கி கணக்கு இல்லாத அனைவருக்கும் வங்கி கணக்கு, ரூ.1 லட்சம் வரை விபத்து காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. கிராமங்களில் சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்த பொதுமக்கள் கழிவறைகளை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் 3 பேருக்கு அடையாள அட்டைகளை கலெக்டர் வழங்கினர். கிராம சபை கூட்டத்தையொட்டி பொதுமக்களுக்கு நொச்சி மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தெய்வநாயகி, துணை கலெக்டர் மலர்கொடி, உதவி இயக்குனர் (ஊராட்சி) சந்தானம், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) வாசுதேவன், நன்னிலம் தாசில்தார் அன்பழகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செல்வராஜ், குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானகிருஷ்ணரமேஷ், அன்பழகன், வட்டார மருத்துவ அலுவலர் ஜெகதீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்