திருக்கடையூரில் சிறப்பு கிராமசபை கூட்டம்

திருக்கடையூர் பகுதியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

Update: 2018-05-01 23:15 GMT
திருக்கடையூர்,

நாகை மாவட்டம், திருக்கடையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தொழிலாளர் தினத்தையொட்டி சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி செயலாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். ஊராட்சி உதவியாளர் சாந்தி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் திருக்கடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனிநபர் கழிவறை வசதி ஏற்படுத்தி கொடுப்பது, திருக்கடையூர் சன்னதி தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, அங்கு பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுவதால் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் அங்கு பொதுக்கூட்டங்கள் நடத்தாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்வது. திருக்கடையூர் ஊராட்சியில் தெருவிளக்கு, குடிநீர் வசதி செய்து கொடுப்பது, 14-வது மத்திய நிதி, மானியக்குழுவினால் வழங்கப்படும் மானிய நிதி ஆகியவற்றை கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தின்படி பயன்படுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதைப்போல பிள்ளைபெருமாள்நல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்துக்கு ஊராட்சி செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். ஊர்நல அலுவலர் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நொச்சி மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரவடிவேல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாமாகுடி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு ஊராட்சி செயலாளர் ஜீவா தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. டி.மணல்மேடு ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் சந்திர சேகரன், மண்டல வளர்ச்சி அலுவலர் ஜனகர் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்