2 ஜி வழக்கு தவறாக சித்தரிக்கப்பட்டது முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா பேச்சு

2 ஜி வழக்கு தவறாக சித்தரிக்கப்பட்டது என்று திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா தெரிவித்தார்.

Update: 2018-05-01 22:08 GMT
திருச்சி,

வானம் என்கிற அமைப்பின் சார்பில் நடத்தப்படும் கூடுவோம்-பேசுவோம் என்கிற நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா எழுதிய 2 ஜி அவிழும் உண்மைகள் என்கிற புத்தகம் குறித்து ஆய்வரங்கம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று இரவு நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கவிஞர் நந்தலாலா தலைமை தாங்கினார். திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ. முன்னிலை வகித்து பேசுகையில், “பெரியார் கொள்கையை காப்பாற்றுவதும், பின்பற்றுவதும் நாம் வருங்கால சமுதாயத்துக்கு செய்யும் நன்மைகள்” என்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா பேசுகையில், “2 ஜி வழக்கின் குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பு வாதம் கேட்கப்படவில்லை. மற்ற எல்லா வழக்குகளிலும் குற்றவாளிகள் வாதம் ஏற்கப்பட்டது. சி.ஏ.ஜி. அறிக்கையை மட்டுமே வைத்து உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு சொல்லப்பட்டது.

அதை நான் எதிர்த்தேன். 2 ஜி வழக்கு தவறாக சித்தரிக்கப்பட்டது. இது தொடர்பாக நான் எழுதிய அனைத்தையும் யாரும் மறுக்கவில்லை. 2 ஜி வழக்கால் மத்தியில் இருந்த காங்கிரசும், மாநிலத்தில் இருந்த தி.மு.க.வும் தனது ஆட்சியை இழந்திருக்கிறது“ என்றார். முன்னதாக திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன், திராவிடர் கழகத்தின் பிரசார செயலாளரும், உயர்நீதி மன்ற வக்கீலான அருள்மொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஷா நவாஸ் ஆகியோர் பேசினர். குமாரவேல் வரவேற்றார். முடிவில் நடராசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்