4,500 ஊழியர்களுக்கு வேலை வழங்காவிட்டால் போராட்டங்கள் நடத்தப்படும்

தமிழகத்தில் 1,300 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் பணி இழந்த 4,500 ஊழியர்களுக்கு வேறு வேலை வழங்காவிட்டால் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க மாநில தலைவர் சிவா தெரிவித்தார்.

Update: 2018-05-01 21:58 GMT
கரூர்,

இதுகுறித்து அவர் கரூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

தமிழகம் முழுவதும் 1,300 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதில் பணியாற்றிய விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என 4,500 பேர் பணி இழந்துள்ளனர். மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் ஊழியர்களுக்கு வேறு எந்த பணியும் வழங்கப்படவில்லை. அவர்கள் அனைவருக்கும் அரசு துறையில் வேறு பணியிடம் ஒதுக்க வேண்டும். வேறு பணி வழங்காவிட்டால் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், டாஸ்மாக் கடையடைப்பு போன்ற பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் ஊழியர்களையும் 15 ஆண்டு கால பணியை கருத்தில் கொண்டு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழங்கப்படும் குறைவான ஊதியத்தால் எங்களது குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

முன்னதாக டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க மண்டல மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு மாநில தலைவர் சிவா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். சட்ட ஆலோசகர் வக்கீல் பாலு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் வேலை பார்த்த பணியாளர்களுக்கு, அவர்களது கல்வித்தகுதி அடிப்படையில் மாற்றுப்பணி வழங்க வேண்டும். டாஸ்மாக்கில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் நிரப்பப்படும் பணியிடங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும். நிறுத்தப்பட்ட ஊக்கத்தொகையை உடனடியாக திரும்ப வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் கரூர், கோவை, திருப்பூர், சேலம், காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கரூர் மாவட்ட தலைவர் சுரேஷ் வரவேற்று பேசினார். முடிவில் பொருளாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.

முன்னதாக கரூர் தபால் நிலையத்தில் இருந்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் ஊர்வலமாக புறப்பட்டு லைட்ஹவுஸ் ரவுண்டானா வந்தடைந்தனர்.

மேலும் செய்திகள்