தேவகோட்டை அருகே தந்தையை வெட்டிக் கொன்ற கல்லூரி மாணவர் கைது

தேவகோட்டை அருகே தாயை ஆபாசமாக பேசி தாக்கியதால் தந்தையை வெட்டிக் கொலை செய்த கல்லூரி மாணவர் கைதுசெய்யப்பட்டார்.

Update: 2018-05-01 21:33 GMT
தேவகோட்டை,

தேவகோட்டை அருகே உள்ளது சின்ன கொடகுடி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்(வயது 45). இவருடைய மனைவி உமாமகேஸ்வரி. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த சேகர், அங்கிருந்து சமீபத்தில் ஊருக்கு வந்திருந்தார். அவர் ஊருக்கு வந்ததில் இருந்து கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சேகர் தனது மனைவியை ஆபாசமாக பேசியதுடன் தாக்கியுள்ளார். இதனால் வீட்டில் இருந்தவர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

இதற்கிடையில் தாயுடன் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த அவர்களது மகன், நள்ளிரவு கட்டிலில் படுத்திருந்த சேகரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து சத்தம் போட்டனர். அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது சேகர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வந்த போலீசார் சேகரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கொலை வழக்குப்பதிவு செய்து தந்தையை வெட்டிக்கொன்ற மகனை போலீசார் கைதுசெய்தனர். தாயை ஆபாசமாக பேசியதுடன், தாக்கியதால் ஆத்திரமடைந்து தந்தையை கொலை செய்ததாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். கைதுசெய்யப்பட்ட சேகரின் மகன் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்