பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு

பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் டி.ஜி.வினய் பேசினார்.

Update: 2018-05-01 23:30 GMT
 திண்டுக்கல், 

மே தினத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. அதன்படி வேடசந்தூர் தாலுகா வெல்லம்பட்டி ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்துக்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். பரமசிவம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

கிராம ஊராட்சிகளில் 5 ஆண்டு வளர்ச்சி திட்டம் குறித்து விவாதித்து திட்ட பணிகளை வரைமுறைப்படுத்துதல், பெண்கள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர்களுக்கு சிறப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கிராம ஊராட்சிகளின் வருவாய் பெருக்குதல், தடுப்பூசி போடுதல், சுகாதாரம், துப்புரவு பணிகள் குறித்து விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க ஆழ்துளை கிணறுகள் மற்றும் நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்படும். மேலும் அனைத்து கிராமங்களுக்கும் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் பண்ணைக்குட்டை அமைத்தல், சாக்கடை கால்வாய் கட்டுதல் சிமெண்டு சாலை அமைத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

குழந்தைகள் கல்வி இடைநிற்றல், பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாத்தல், குழந்தை தொழிலாளர்களை மீட்டெடுத்தல், குழந்தை திருமணத்தை தடுத்தல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து அரசு அலுவலர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் அந்தந்த பகுதி அலுவலர்களிடம் மனு அளிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் கருப்பையா, தாசில்தார் சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் முசுவானுத்து ஊராட்சி என்.ஆண்டிப்பட்டியில் ஊராட்சி செயலாளர் விஜயகர்ணபாண்டியன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. ஒன்றிய விரிவாக்க அலுவலர் ராஜராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க சாக்கடை கால்வாய் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

அதேபோல் கோட்டூர் ஊராட்சி மைக்கேல்பாளையத்தில் ஊராட்சி செயலாளர் பாண்டியராஜன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்ட வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தனர். பிள்ளையார்நத்தத்தில் ஊராட்சி செயலாளர் சின்னசாமி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அப்போது அணைப்பட்டி பேரணை மற்றும் வீரஆஞ்சநேயர் கோவில் பகுதியை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

நரியூத்து ஊராட்சி உச்சணம்பட்டியில் ஊராட்சி செயலாளர் முத்துகுமார் தலைமையிலும், நூத்து லாபுரம் ஊராட்சி சின்னமநாயக்கன்கோட்டையில் ஊராட்சி செயலாளர் முத்து தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடந்தது. இதேபோல் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடந்தது. அதனை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லெட்சுமிகலா, செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சாணார்பட்டி ஒன்றியத்தில் மே தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டங்கள் வேம்பார்பட்டி, சாணார்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, தவசிமடை உள்ளிட்ட 21 ஊராட்சிகளிலும் நடைபெற்றது. இதில் கிராம ஊராட்சியில் செயல்படுத்த வேண்டிய பணிகள், மத்திய-மாநில அரசுகளின் திட்டங்கள், ஊராட்சியின் வரவு-செலவு அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

கிராமசபை கூட்டத்தின் போது அனைத்து ஊராட்சிகளிலும் வறட்சியால் குடிநீர் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, குடிநீர் வினியோகத்தை சீராக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

சாணார்பட்டி ஒன்றியத்தில் விரைவில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை முடித்து தண்ணீர் வினியோகம் தொடங்க வேண்டும், தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி பேசினர்.

இந்த கூட்டங்களில் சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமுத்து, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாராஜமாணிக்கம், ரேணுகாதேவி, உமாமகேஸ்வரி உள்ளிட்ட ஒன்றிய அதிகாரிகள் மற்றும் அனைத்து ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

நத்தம் அருகே லிங்கவாடியில் மே தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. யூனியன் அலுவலர் பாலாஜி மேலிட பார்வையாளராக கலந்து கொண்டார். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது, டெங்கு காய்ச்சல் தடுப்பது பற்றியும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணிகள் குறித்தும் பேசப்பட்டது. ஊராட்சி செயலர் அன்புசெல்வம் முன்னதாக வரவேற்றார். இதைபோல ரெட்டியபட்டி, பரளி புதுார் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. யூனியன் அலுவலர்கள் நாகேந்திரன், நம்பி தேவி ஆகியோர் மேலிட பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் மணி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்