அனைத்து அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்காக களப்பணியாற்ற வேண்டும் - ஐகோர்ட்டு நீதிபதி

கலெக்டர் தலைமையில் அனைத்து அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்காக களப்பணியாற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி கூறினார்.

Update: 2018-05-01 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதி நக்கீரன் வரவேற்றார். தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை கலந்து கொண்டு பேசினார்.

இதில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி குலுவாடி ரமேஷ் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள்நலத்துறை, வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர்நலத்துறை, சமூக நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

உழைக்கும் மக்களுக்கு உதவும் வகையில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. உழைக்கும் ஏழை எளிய நடுத்தர மக்களை ஊக்குவிக்கும் வகையில், அரசு அவர்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் அவர்கள் வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வழிவகை செய்யப்படுகிறது. அரசின் நலத்திட்டங்கள் உரிய பயனாளிகளுக்கு சென்று அடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

சமுதாய வளர்ச்சி என்பது ஏழை எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவி கள் தங்குதடையின்றி சென்று அடைவதை சார்ந்ததாகும். ஏழை,எளிய நடுத்தர மக்கள் ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதே ஒரு சிறந்த அரசிற்கு எடுத்துக்காட்டாகும். குழந்தைகளுக்கு 14 வயது வரை கட்டாயக்கல்வி வழங்குவதன் மூலம் அவர்கள் உயர் கல்வி பெற்று சிறந்த நிலை அடைவார்கள்.

அரசின் திட்டங்கள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அத்திட்டங்கள் முழுமையாக மக்களிடம் சென்றடையும் வண்ணம் அதிகாரிகள் பணியாற்றிட வேண்டும். கலெக்டர் தலைமையில் அனைத்து அதிகாரிகளும் ஒருங்கிணைந்து சிறந்த முறையில் செயல்பட்டு ஏழை எளிய நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்காகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும் களப்பணி ஆற்றிட வேண்டும்.

மாவட்ட சட்ட சேவை மையத்தின் மூலம் ஏழை, எளிய அனைத்து தரப்பு மக்களுக்கும் சட்ட சேவைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மக்களுக்கு உரிய சட்ட சேவையினை வழங்கும் வகையில் அரசுடன் நீதித்துறை இணைந்து செயல்பட்டு வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கூடுதல் மாவட்ட நீதிபதிகள் கார்த்திகேயன், பாஸ்கரன், பாலகிருஷ்ணன், சிறப்பு மாவட்ட நீதிபதி பூரணஜெயஆனந்த், மாவட்ட சார்பு நீதிபதி சாந்தி, வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மணி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் ரவிச்சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், தாசில்தார் தங்கபிரபாகரன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், நீதிபதிகள், வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்