தேனி கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
கிராமங்களை சுகாதாரமாக பாதுகாக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று அம்பாசமுத்திரத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பல்லவி பல்தேவ் பேசினார்.
தேனி,
தேனி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது. தேனி ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:-
கிராமசபைக் கூட்டத்தின் நோக்கம் மக்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையே உள்ள தொடர்பினை பூர்த்தி செய்வதற்கும், ஒரு கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களின் முன்னிலையில் விவாதித்து மக்களின் முழு ஆதரவோடு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி, அதன்மூலம் அரசின் பணிகளை மேற்கொள்வதாகும். அம்பாசமுத்திரம் ஊராட்சி சிறந்த ஊராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரதமரால் சிறந்த ஊராட்சிக்கான பரிசு வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து பொதுமக்களின் கூட்டு முயற்சியின் மூலமே சுத்தமான, சுகாதாரமான மற்றும் சிறந்த ஊராட்சியாக மாற்ற முடியும். பொதுமக்கள் தங்களது குடியிருப்புகளில் உருவாகும் குப்பைகளை தெருக்களில் கொட்டாமல் வீட்டிலேயே தரம் பிரித்து தூய்மை காவலர்களிடம் வழங்க வேண்டும்.
திறந்த வெளியில் மலம் கழிக்காமல், தனி நபர் கழிப்பறை அல்லது பொது கழிப்பறையினை பயன்படுத்திட வேண்டும். சுய உதவிக்குழுவினர் தங்களது கிராமத்தை சுகாதாரமான கிராமமாக உருவாக்கிட திட்டமிட்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கோடைகாலம் என்பதால் பொதுமக்கள் நீரின் அருமை கருதி சிக்கனமாக பயன்படுத்திட வேண்டும். கிராமங்களை சுகாதாரமாக பாதுகாக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்.
தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களின் பயன்கள் பொதுமக்களை சென்றடைந்துள்ளதா என்பதனை கிராமசபை கூட்டங்களின் மூலமே அறிய முடியும். தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
பின்னர், ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பசுமை வீடுகள் கட்டும் பணி, புதிதாக கட்டப்பட்ட கிராம ஊராட்சி சேவை மையக் கட்டிடம், மண்புழு தயாரிப்பு உரக்கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும்,கழிவுநீர் வாய்க்கால் மற்றும் கழிப்பிடம் பயன்பாடு குறித்து வீதி, வீதியாக சென்று ஆய்வு செய்து மக்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் திலகவதி, செயற்பொறியாளர் கவிதா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அபிதாஹனீப், தாசில்தார் சத்தியபாமா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராஜ், மலர்விழி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் கீழவடகரை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், தனலட்சுமி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் பார்வையாளராக பதிவறை எழுத்தர் பாலமுருகன், ஊராட்சி செயலாளர் ஜெயபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வடபுதுப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு பணி மேற்பார்வையாளர் விஜயகாந்தி தலைமையிலும், சருத்துப்பட்டி ஊராட்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.
கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, பாலூத்து, மயிலாடும்பாறை, குமணன்தொழு, முத்தாலம்பாறை, மூலக்கடை உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளிலும் மே தினத்தையொட்டி சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது. கடமலைக்குண்டு கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றிய ஆணையர் ஜெகசீசசந்திரபோஸ் கலந்துகொண்டார்.
இதேபோல் ஆண்டிப்பட்டி தாலுகா எட்டப்பராஜபுர ஊராட்சியில், நடந்த கிராம சபை கூட்டத்தில் உதவி இயக்குனர் (கி.ஊ) ரவிச்சந்திரன், ஆண்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் எபி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.