குவாரியில் மண் சரிந்து 3 பேர் பலி மேலும் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதி

வாடிப்பட்டி அருகே, குவாரியில் மண் சரிந்து 3 தொழிலாளிகள் பலியானார்கள். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2018-05-01 23:30 GMT
வாடிப்பட்டி,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த பூச்சம்பட்டியில் அரசு புறம்போக்கு நிலத்தில் கல்குவாரி உள்ளது. சுமார் 1½ ஏக்கர் பரப்பரளவு கொண்ட இந்த குவாரியை, மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு குத்தகைக்கு எடுத்தார். குத்தகை காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

சுமார் 100 அடி உயரம் கொண்ட அந்த குவாரியில் தொழிலாளர் தினமான நேற்றும் சுமார் 7 பேர் பணியாற்றி வந்தனர். கோடை காலம் என்பதால் அதிகாலை 6 மணிக்கே ஊழியர்கள் தங்கள் வேலையை தொடங்கி விட்டனர்.

பொதுவாக குவாரியின் மேல்புறத்தில் இருந்து தான் கற்களை வெட்டி எடுப்பது வழக்கம். அதன்படி ஊழியர்கள் சுமார் 80 அடி உயரத்தில் நின்று கொண்டு கற்களை வெட்டி எடுத்துக் கொண்டு இருந்தனர். காலை 9 மணியளவில் திடீரென்று மேல்புறத்தில் இருந்து மண்ணும், கற்களும் கீழே சரிந்தன. இவை பணியாற்றிக் கொண்டு இருந்த தொழிலாளர்கள் மீது சரிந்தன. இதில் நிலைதடுமாறிய அவர்கள் கீழே விழுந்தனர். அதில் அவர்கள் உடல் முழுவதும் அடிபட்டு பலத்த காயம் அடைந்தனர்.

இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் குலசேகரன்கோட்டையை சேர்ந்த பரமசிவம் (வயது 45) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 6 பேரையும் சிகிச்சைக்காக வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பூச்சம்பட்டியை சேர்ந்த நாகராஜ்(54), கிருஷ்ணன்(45) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பூச்சம்பட்டியை சேர்ந்த சீனிவாசன்(48) என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்ற 3 பேர் சிறுகாயங்களுடன் வாடிப்பட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் பூச்சம்பட்டி கிராம பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்து இந்த கல்குவாரியை நிரந்தரமாக மூடவேண்டும் என்றும், சீனிவாசனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க வேண்டும் என்று வாடிப்பட்டி பஸ்நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த மாணிக்கம் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன், வருவாய் கோட்டாட்சியர் அரவிந்தன், தாசில்தார் பார்த்திபன், சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சீனிவாசனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கான கட்டணத்தை தான் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவதாக மாணிக்கம் எம்.எல்.ஏ. கூறியதை தொடர்ந்து, மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.

இதற்கிடையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அமைச்சர் உதயகுமார் கூறுகையில், இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தொழிலாளர் நலவாரியம் மூலம் உரிய இழப்பீடு வழங்கப்படும். தொழிலாளர் தினத்தன்று, தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள கல்குவாரிகள் கலெக்டர் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, குவாரிகள் மூடப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்தநிலையில் விபத்து நடந்த குவாரியின் உரிமத்தை ரத்து செய்து கலெக்டர் வீரராகவராவ் நேற்று மாலை உத்தரவிட்டார்.'

மேலும் செய்திகள்