சேலம் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை
சூறைக்காற்றுடன் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ததில் சேலத்தில் அதிகபட்சமாக 71.8 மி.மீட்டர் மழை அளவு பதிவானது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சேலத்தில் இரவில், இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
சேலம் திருவாக்கவுண்டனூர் சுகுமார் காலனி பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. வீடுகளில் தேங்கிய தண்ணீரை பெண்கள் பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர். எனவே அவர்கள் இரவில் தூங்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சேலம்-ஜங்சன் சாலையில் மறியலுக்கு முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சூரமங்கலம் போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் 50-க்கும் மேற்பட்டவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று காலை, வீட்டிற்குள் புகுந்த மழைநீரை அப்புறப்படுத்தினர்.
இந்த மழையின் போது வீசிய சூறைக்காற்றால் பல இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்தன. தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகே சாய்ந்த மரத்தை செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்கள் சென்று அப்புறப்படுத்தினர். இதேபோல் சேலம் டவுன் மக்கான் தெருவில் இருந்த மின்கம்பம் உடைந்து சாலையில் விழுந்தது. இதையடுத்து அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் அதனை சரிசெய்தனர்.
நெத்திமேடு பகுதியில் ஒரு மின்கம்பமும், மரமும் சாய்ந்தது. இதை மின்வாரிய ஊழியர்கள் சரிசெய்தனர். மழையின் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட அனைத்து சாலைகளும் சேரும் சகதியுமாக காணப்படுகிறது.
சேலத்தில் அதிகபட்சமாக 71.8 மி.மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. இதேபோல் பிற இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-
காடையாம்பட்டி -35, மேட்டூர் -30.2, எடப்பாடி-18, சங்ககிரி- 13 , ஏற்காடு-8.6, அணைமடுவு- 5, வாழப்பாடி-3.
என மாவட்டம் முழுவதும் மொத்தம் 213 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 14.2 மி.மீட்டர் பதிவானது. கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கத்தால் தவித்து வந்த மக்களுக்கு இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.