குட்கா தொழிற்சாலை செயல்பட்டதில் தி.மு.க. பிரமுகருக்கு தொடர்பு - போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி

குட்கா தொழிற்சாலை செயல்பட்டதில் தி.மு.க. பிரமுகருக்கு தொடர்புள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி கூறினார்.

Update: 2018-05-01 23:30 GMT
கோவை,

கோவை அருகே குட்கா தொழிற்சாலை செயல்பட்டு வந்ததில் தி.மு.க. பிரமுகருக்கு தொடர்பு இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி கூறினார்.

இது தொடர்பாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை அருகே உள்ள கண்ணம்பாளையம் நல்லம்மாள் தோட்டத்தில் உள்ள அமித் எஸ்.பிராக்ரன்சஸ் என்ற தொழிற்சாலையில் குட்கா உள்பட போதையை கொடுக்கும் புகையிலை பொருட்கள் தயாரிக்கப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.கடந்த 2011-ம் ஆண்டில் புதுடெல்லியை சேர்ந்த அமித் ஜெயின் என்பவர் கே.கே.சி.சுப்பிரமணியம் பிரதர்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து விவசாய நிலத்தை வாங்கி உள்ளார். அதில் பான்மசாலா மற்றும் இனிப்பு பாக்கு தயாரிக்க அனுமதி வாங்கப்பட்டு உள்ளது.

முதலில் ஒரு நாளுக்கு ஒரு டன் இனிப்பு பாக்கு தயாரிக்க அனுமதி பெறப்பட்டு உள்ளது. பின்னர் அதை மாற்றி 500 கிலோ இனிப்பு பாக்கு, 500 கிலோ பான்மசாலா தயாரிக்க அனுமதி பெற்று உள்ளனர். அதற்கான அனைத்து மூலப்பொருட்களும் டெல்லியில் இருந்து வந்துள்ளது.நாங்கள் கடந்த 27-ந் தேதி இரவு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்குள் சென்று சோதனை செய்தபோது, அங்கு குட்கா தொடர்பான எந்த பொருட்களும் இல்லை. பின்னர் ஒரு இடத்தில் மட்டும் 20 சாக்கு மூட்டைகளில் புகையிலை பொருட்கள் இருந்தன.

இனிப்பு பாக்கு, பான்மசாலா தயாரிக்கும் இடத்தில் ஏன் புகையிலை பொருட்கள் இருக்க வேண்டும் என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டது. இது பற்றி, அங்கு பணியாற்றி வந்த மேலாளர் ரகுராமனை பிடித்து விசாரித்தோம். அவர் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்ததால், அவர் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த தொழிற்சாலையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சோதனை செய்தோம். அங்கு வேலை செய்து வரும் ஊழியர்களின் குடியிருப்பை திறந்து பார்த்தபோது, வி.ஐ.பி. என்ற பெயரில் பண்டல் பண்டலாக குட்கா பாக்கெட்டுகள் இருந்தன. அதுபோன்று அங்குள்ள பங்களாவிலும் சோதனை செய்தபோது அங்கும் குட்கா பாக்கெட்டுகள் இருந்தன.

உடனே அங்கிருந்த அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்து, வருவாய்த்துறை அதிகாரிகள் முன்பு கணக்கெடுத்து, அந்த தொழிற்சாலைக்கு சீல் வைத்தோம். அதன் மதிப்பு ரூ.78.5 லட்சம் ஆகும். இது தொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகுராமன் மற்றும் அங்கு வேலை செய்து வந்த தொழிலாளர்கள் 3 பேர் என மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இது குறித்து விசாரணை நடத்துவதற்காக 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 7 சப்-இன்ஸ்பெக் டர்கள், 20 போலீசார் கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் ஒரு தனிப் படை அந்த தொழிற்சாலையின் உரிமையாளரான அமித் ஜெயினை பிடிக்க டெல்லி விரைந்து உள்ளது. மீதமுள்ள 3 தனிப்படையினர் குட்கா தொழிற்சாலை செயல்பட்டதில் யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக இந்த நிறுவனம் கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வந்ததால், அந்த ஆண்டில் இருந்து கண்ணம்பாளையம் பேரூராட்சிக்கு சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் வரி ஆகியவற்றை செலுத்தி உள்ளது. ஆனால் அந்த தொழிற்சாலைக்கான முறையான கட்டிட அனுமதி இல்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதியும் இல்லை. இந்த தொழிற்சாலை செயல்படவும், அமித் ஜெயினின் இந்த முறையற்ற செயலுக்கு கண்ணம்பாளையத்தை சேர்ந்த அப்போதைய பேரூராட்சி தலைவரான, தி.மு.க.வை சேர்ந்த தளபதி முருகேசனுக்கு பல வழிகளில் தொடர்பு இருந்துள்ளது

முதற்கட்ட விசாரணையில், அவருக்கு தொடர்பு இருப்பது மட்டுமே தெரிந்துள்ளது. என்னென்ன வழிகளில் தொடர்பு இருக்கிறது என்பது தெரியவில்லை. இது தொடர்பாக தொழிற்சாலையின் மேலாளர் ரகுராமனை காவலில் எடுத்து விசாரித்தால்தான் முழு விவரமும் தெரிய வரும். மேலும் அரசியல்வாதிகள் யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது தெரிந்து விடும்.

இது குறித்து தொடர்ந்து தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கூட அங்கு உணவு பாதுகாப்புத்துறையை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து உள்ளனர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த தொழிற்சாலையில் இருந்து ஒரு மடிக்கணினி மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்று உள்ளன. மேலும் மடிக்கணினியில் என்னென்ன இருக்கிறது என்பது குறித்து அமித் ஜெயினை கைது செய்த பின்னர் அவர் முன்னிலையில் அதை திறந்து அதில் உள்ள ஆவணங்களை பரிசோதிக்க உள்ளோம்.

நாங்கள் கடந்த 27-ந் தேதி அங்கு சோதனை செய்தபோது அன்று இரவு 12 மணிக்கு தளபதி முருகேசன் மற்றும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் அங்கு வந்து எங்களை பணி செய்ய விடாமல் தடுத்தனர். இது தொடர்பாக தான் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர் களை நாங்கள் இரவே கைது செய்து விட்டதாக சிலர் கூறுகிறார்கள். நாங்கள் அவர்களை இன்று (நேற்று) காலை 5.30 மணிக்குதான் கைது செய்தோம் இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கோவை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனிதா, கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், போலீஸ் துணை சூப்பிரண்டு (பயிற்சி) அருண், சூலூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்