கோழிப்பண்ணையாளர்கள் அனைவரும் பங்கேற்க உரிமை உள்ளது அமைச்சர் சரோஜா பேட்டி
சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டரில் கோழிப்பண்ணையாளர்கள் அனைவரும் பங்கேற்க உரிமை உள்ளதாக அமைச்சர் சரோஜா கூறினார்.
நாமக்கல்,
தமிழக சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா நேற்று நாமக்கல் அருகே உள்ள அலங்காநத்தத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் டெண்டர் சட்டத்தின் படி விதிமுறைகளுக்கு உட்பட்டு வெளிப்படை தன்மையுடன் எவ்வித குறைபாடும் இன்றி, குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டு சத்துணவு திட்டத்திற்கு முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அரசியல் காரணங்களுக்கான டெண்டர் முறையை மாற்ற வேண்டும் என பேசப்படுகிறது. இந்த டெண்டர் முறையால் அரசுக்கு நஷ்டம் என்பதை என்னால் மறுக்க முடியும்.
இது தனிநபர் டெண்டர் இல்லை. இதில் கோழிப்பண்ணையாளர்கள் அனைவரும் பங்கேற்கலாம். அவர்களுக்கு உரிமை உள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு என்ன விலை நிர்ணயம் செய்கிறதோ, அதை தான் தமிழக அரசு நிர்ணயம் செய்து வாங்குகிறது. ஆனால் தற்போது உள்ள டெண்டரில் நிபந்தனைகளை முறையாக பூர்த்தி செய்யாத நபர்கள், பங்கேற்க முடியாது.
இதேபோல் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணியிடம் கூட்டுறவு தேர்தல் முறைகேடுகள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. தோல்வி அடைந்தவர்கள் அவர்களுடன் இருப்பவர்களை தக்க வைக்க, ஏதாவது காரணம் கூறி வருகிறார்கள் என்றார். மேலும் குட்கா விவகாரம் குறித்து பேசும் தி.மு.க.வினர், 2ஜி வழக்கு விசாரணை நடந்தபோது ஏன் ராஜினாமா செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.