பழுதான மினி வேனை தள்ளி சென்றவர்கள் மீது டெம்போ மோதி 5 பேர் பலி

மும்பை - புனே நெடுஞ்சாலையில் பழுதான மினி வேனை தள்ளி சென்றவர்கள் மீது டெம்போ மோதிய பயங்கர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2018-04-30 23:32 GMT
மும்பை,

மும்பை மான்கூர்டு பகுதியை சேர்ந்த 8 பேர் புனேயில் நடக்க இருந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று அதிகாலை மினி வேனில் புறப்பட்டனர். இதில் அதிகாலை 4 மணியளவில் மும்பை - புனே நெடுஞ்சாலையில் பன்வெல் அதாய் விலேஜ் அருகே சென்ற போது மினி வேன் பழுதாகி நடுவழியில் நின்றது. இதையடுத்து மினி வேனில் இருந்தவர்கள் கீழே இறங்கி அதை அருகில் உள்ள ஒர்க் ஷாப்பிற்கு தள்ளி சென்றனர்.

இந்தநிலையில் அந்த வழியாக டெம்போ ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அதை ஓட்டி வந்த டிரைவர், மினி வேனை தள்ளியபடி சென்று கொண்டு இருந்தவர்களை கவனிக்கவில்லை. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் டெம்போ, மினி வேன் மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் மினி வேனை தள்ளியபடி சென்று கொண்டு இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர். 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்தநிலையில் தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் 2 பேர் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் கூறினர். விபத்தில் பலியானவர்கள் பெயர், சந்தோஷ் (வயது40), ரஷித் கான் (24), ஜூமன் சேக் (45), தினேஷ் (30), அயோத்யா (26) என்பது தெரியவந்தது. படுகாயமடைந்த ராமசந்திராவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சஞ்சய் (28), முந்த்ரிகா (36) ஆகியோர் லேசான காயங்களுடன் தப்பினர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய டெம்போ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்