விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண்ணை இலவசமாக எடுக்க அனுமதி கலெக்டர் ராஜாமணி தகவல்

விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண்ணை இலவசமாக எடுக்க அரசு அனுமதியளித்துள்ளதாக கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.

Update: 2018-04-30 23:10 GMT
திருச்சி,

விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது என்று திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண், சவுடு மண், களிமண் போன்ற கனிமவளங்களை விவசாய நிலங்களை மேம் படுத்துவதற்காகவும், வீட்டு உபயோகத்திற்காகவும், மண்பாண்டம் செய்வது போன்ற பயன்பாட்டிற்காகவும் இலவசமாக எடுத்துக்கொள்ள தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது.

இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் விவசாய தேவைகளுக்காக வண்டல் மண் வழங்கப்படுவது தொடர்பாக கிராமந்தோறும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அந்தந்த கிராம அளவிலேயே விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதிவாய்ந்த நபர்களுக்கு வண்டல் மண் எடுத்துச்செல்ல அரசு விதிமுறைகளின்படி அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் உள்ள 497 அங்கீ கரிக்கப்பட்ட நீர்நிலைகளில் 258 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்திட அனுமதி வழங்கப்பட்டு, 18 ஆயிரத்து 613 பயனாளிகள் பயனடைந்தனர். நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி, கரைகளை பலப்படுத்தும் பணி ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டன. வண்டல் மண் எடுக்கப்பட்ட நீர்நிலைகளில் நீர்பிடிப்பு அதிகரித்து வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்த மழைநீர், நீர்நிலைகளில் சேகரிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. மேலும், வண்டல் மண் இடப்பட்ட வயல்களில் மண்ணின் தன்மை மேம்படுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தினால் விவசாயிகளும், பொதுமக்களும் மிகவும் பயனடைந்ததால் இந்த ஆண்டும் தொடர்ந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதை ஏற்று தமிழக அரசு நடப்பாண்டில் வண்டல் மண் வழங்கிட அனுமதி வழங்கியுள்ளது. அனைத்து கிராமங்களிலும் நாளை(புதன்கிழமை) முதல் 5-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்திடவும், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் அமைத்திடவும், ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்திடவும் உரிய நேரத்தில் விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற்று தகுதியான விவசாயிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட நீர்நிலைகளில் விவசாயப் பயன்பாட்டிற்காக வண்டல் மண்ணை எளிமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டு இலவசமாக வெட்டி எடுத்துச்செல்ல விண்ணப்பங்கள் அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்