காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி மக்களும் போராட முன்வரவேண்டும் பிரசார பயணத்தில் வைகோ

தமிழகத்தின் அனைத்து பகுதி மக்களும் போராட முன்வரவேண்டும் என்று பிரசார பயணத்தில் வைகோ பேசினார்.

Update: 2018-04-30 23:45 GMT
தஞ்சாவூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து பகுதி மக்களும் போராட முன்வரவேண்டும் என்று பிரசார பயணத்தில் வைகோ பேசினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசை வலியுறுத்தி காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் வைகோ தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் இருந்து சுற்றுப்பயணத்தை நேற்று முன்தினம் தொடங்கினார்.

அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் பூதலூர், திருவையாறு வடக்கு, தெற்கு ஒன்றியப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் வேனில் நின்றபடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பேசினார். நேற்று தஞ்சை ஒன்றியம் மருங்குளத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கிய அவர் வேனில் நின்றபடி பேசினார். அப்போது அவர் பேசிய தாவது:-

கர்நாடக மாநிலம் மேகதாது ராசிமணலில் அணைகள் கட்டப்போகிறார்கள், மீத்தேன், ஷேல்கியாஸ், ஹைட்ரோ கார்பன் திட்டங்களினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறப்போகிறது என்றும், இதனை தடுக்க தவறினால் வருங்கால சந்ததியினர் அழிந்துபோவார்கள் என்றும் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பரில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பிரசார பயணம் மேற்கொண்ட போது தெரிவித்தேன். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படாத விழிப்புணர்வு இன்று மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. எதிர்காலத்தை பற்றிய அச்சம் ஏற்பட்டிருக்கிறது. 25 லட்சம் ஏக்கர் பாசனம் அடியோடு அழிந்துபோகும் என்ற கவலை தற்போது மக்களிடம் வந்திருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது. மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால் கர்நாடகத்தில் அணைகள் கட்டுவதை தடுக்க முடியாது. அணைகள் கட்டுவதை தடுக்காவிட்டால் மேட்டூருக்கு தண்ணீர் வராது. நம்முடைய பகுதி கொஞ்ச நாட்களில், சில மாதங்களில், சில வருடங்களில் பாலைவனமாக மாறிவிடும். நம் வருங்கால சந்ததிகள், பேரக்குழந்தைகள் பசியும், பட்டினியுமாக இருக்கக்கூடிய மிகப்பெரிய அபாயம் ஏற்படும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக செழித்துக்கிடந்த செந்தமிழ்நாட்டுக்கு வளம் சேர்க்கின்ற சோழவளநாடு, சோறுடைத்து என்ற பெயருக்கு உரிய இந்த புண்ணிய பூமி பாழாகிவிடும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழகத்துக்கு நயவஞ்சகம் செய்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக கோரிக்கை விடுத்தும் முதல்-அமைச்சர், எதிர் கட்சி தலைவர் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க மறுக்கிறார். இது 7½ கோடி மக்களை அவமதிக்கின்ற செயல். இப்படி ஒரு பிரதமரை இதுவரை இந்திய அரசியலில் கண்டதில்லை. இந்த துரோகத்தை மன்னிக்க முடியாது. அவர் நெருப்போடு விளையாடுகிறார். இந்திய ராணுவமே வந்தாலும் இந்த மண் பயப்படாது. நாங்கள் அமைதியாக அறப்போர் நடத்துகிறோம்.

முல்லைப்பெரியாறு என்றால் தென்பாண்டி மண்டலம் போராடும், காவிரி பிரச்சினை என்றால் சோழமண்டலம் போராடும், நெய்யாறு அணைக்கட்டு பிரச்சினை என்றால் கன்னியாகுமரி மக்கள் போராடுவார்கள், பாலாற்று பிரச்சினை என்றால் தென் மண்டலம் போராடும் என்ற நிலை இருக்கக்கூடாது. எந்த பகுதிக்கு ஆபத்து வந்தாலும் மொத்த தமிழகமும் சேர்ந்து போராடவேண்டும். எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து பகுதி மக்களும் போராட முன்வரவேண்டும் இவ்வாறுஅவர் பேசினார்.

பிரசார பயணத்தில் வைகோவுடன் எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன்(ஒரத்தநாடு), துரை.சந்திரசேகரன் (திருவையாறு), ம.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் உதயகுமார், மாநில விவசாய அணி செயலாளர் முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக மருங்குளம் வந்த வைகோவிற்கு ம.தி.மு.க. செயலாளர் லட்சுமணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம், ஒன்றிய செயலாளர் நடுவூர் செல்வராஜ், செயலாளர் சொக்கர், அறிவுடைசெல்வம், ஹரிகிருஷ்ணன், காங்கிரஸ் வட்டார செயலாளர் சுபாஷ்சந்திரபோஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்