பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை தேவேகவுடா பேட்டி

தொங்கு சட்டசபை அமைந்தால் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று தேவேகவுடா கூறினார்.

Update: 2018-04-30 23:00 GMT
பெங்களூரு,

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

பா.ஜனதாவுடன், ஜனதா தளம்(எஸ்) கட்சி ரகசிய கூட்டணி அமைத்துள்ளதாக சித்தராமையா திரும்ப திரும்ப சொல்கிறார். இது முற்றிலும் பொய். சித்தராமையாவின் இந்த குற்றச்சாட்டு வெட்கக்கேடானது. அவர் தரம் தாழ்ந்து அரசியல் நடத்துகிறார். ஒரு பொய்யை 100 முறை சொல்லி மக்களை திசை திருப்ப அவர் முயற்சி செய்கிறார்.

அமித்ஷா மற்றும் குமாரசாமி ஒரே விமானத்தில் பயணம் செய்து ரகசிய கூட்டணி குறித்து ஆலோசித்ததாக ஒரு போலியான விமான டிக்கெட்டை சமூக வலைதளத்தில் பரவ விட்டுள்ளனர். இதுகுறித்து ஆதாரம் இருந்தால் சித்தராமையா உடனே வெளியிட வேண்டும். தேர்தலுக்கு பிறகு தொங்கு சட்டசபை அமைந்தால் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை.

பா.ஜனதாவுடன் குமாரசாமி கைகோர்த்தால் அதை நான் ஏற்கமாட்டேன். இதுபற்றி ஒரு செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தேன். இதில் என்ன தவறு உள்ளது?. நாங்கள் முழு பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. ராகுல் காந்தி ஹாசனுக்கு வந்தபோது எங்கள் கட்சியை பாஜனதாவின் ‘பி டீம்‘ என்று கூறினார். அன்று முதல் சித்தராமையா எங்கள் கட்சிக்கு எதிராக கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.

சித்தராமையா மற்றும் ஜமீர்அகமதுகான் ஆகியோர் விமானத்தில் கராச்சிக்கு சென்றதாக விமான டிக்கெட் வெளியாகியுள்ளது. எதை நம்புவது?. தோல்வி பயத்தால் சித்தராமையா எங்களை தாக்கி பேசுகிறார். மல்லிகார்ஜுன கார்கே அவரை போல பேசுகிறாரா?. எக்காரணம் கொண்டும் நாங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம். பெரும்பான்மை கிடைக்காவிட்டால் எதிர்க்கட்சி வரிசையில் அமர நாங்கள் தயாராக உள்ளோம். இதை நான் பல முறை கூறிவிட்டேன்.

சித்தராமையா அத்வானி வீட்டுக்கு சென்றார். இதனால் பயந்துபோன சோனியா காந்தி அவருக்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்கினார். இதெல்லாம் எனக்கு தெரியும். ஆனால் அவரை போல் நான் பேசவில்லை. அவ்வாறு பேச வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. சித்தராமையா எவ்வளவு பொய் பேசினாலும், மக்கள் எங்களை ஆதரிக்க முடிவு செய்துவிட்டனர். இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

மேலும் செய்திகள்