வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது

கன்னிவாடி அருகே, வாரிசு சான்றிதழ் வழங்கு வதற்காக ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-05-01 00:00 GMT
கன்னிவாடி,

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள சந்தமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சின்னச்சாமிதேவர். அவருடைய மகன் இந்திரன் (வயது 42). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னச்சாமிதேவர் இறந்துவிட்டார். இதையொட்டி இந்திரன், வாரிசு சான்றிதழ் கேட்டு ஒட்டன்சத்திரம் அருகே புதுச்சத்திரத்தில் உள்ள பலக்கனூத்து வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

நீண்ட நாட்கள் அலைந்து பார்த்தும் அவருக்கு வாரிசு சான்றிதழ் கிடைக்கவில்லை. இதையடுத்து இந்திரன், வருவாய் ஆய்வாளர் குப்பாத்தாளை (42) நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார். அப்போது அவர், வாரிசு சான்றிதழ் பெற வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அவ்வளவு பணம் என்னால் கொடுக்க முடியாது என்று இந்திரன் தெரிவித்துள்ளார். இறுதியில் ரூ.7 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத இந்திரன், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு சத்தியசீலன் தலைமையிலான போலீசார், வருவாய் ஆய்வாளரை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.

அதன்படி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை இந்திரனிடம் கொடுத்து, வருவாய் ஆய்வாளரிடம் கொடுக்க கூறினர். இதையடுத்து இந்திரன் நேற்று வருவாய் அலுவலகத்துக்கு சென்று, வருவாய் ஆய்வாளர் குப்பாத்தாளை சந்தித்து ரூ.7 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், குப்பாத்தாளை கையும், களவுமாக மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவரிடம் அலுவலகத்தில் வைத்து ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். தீவிர விசாரணைக்கு பிறகு அவரை அதிகாரிகள் கைது செய்தனர். வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்