வேட்புமனு வாங்க அதிகாரி வரவில்லை என கூறி நிக்கல்சன் கூட்டுறவு வங்கியை பூட்டி போராட்டம்

வேட்புமனு வாங்க அதிகாரி வரவில்லை என கூறி நிக்கல்சன் கூட்டுறவு வங்கியை பூட்டி போராட்டம் நடத்தினர்.

Update: 2018-04-30 22:45 GMT
தஞ்சாவூர்,

வேட்புமனு வாங்க அதிகாரி வரவில்லை என கூறி நிக்கல்சன் கூட்டுறவு வங்கியை இழுத்து பூட்டி தி.மு.க.வினர், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் 4-வது கட்டமாக பல்வேறு கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்துவதற்காக நேற்று வேட்பு மனுக்கள் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தன. இதில் பல இடங்களில் வேட்புமனுக்களை பெறுவதற்கு அதிகாரிகள் வரவில்லை எனக்கூறி தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை கீழராஜவீதியில் உள்ளது நிக்கல்சன் கூட்டுறவு வங்கி. இந்த வங்கியின் தலைவர் மற்றும் இயக்குனர்களை தேர்வு செய்வதற்காக வேட்புமனுக்கள் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து காலை 10 மணிக்கு தி.மு.க. மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் வங்கி முன்பு திரண்டனர்.

பின்னர் அவர்கள் வேட்புமனு வாங்கும் அதிகாரி எப்போது வருவார் என அங்கிருந்த ஊழியர்களிடம் கேட்டனர். அதற்கு அவர்கள் இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவார் என தெரிவித்தனர். ஆனால் 11.30 மணி ஆகியும் வரவில்லை. இதையடுத்து தி.மு.க.வினர் நகர செயலாளர் நீலமேகம் தலைமையில் நகர அவைத்தலைவர் ஆறுமுகம், முன்னாள் கவுன்சிலர் மேத்தா, துணை செயலாளர் நீலகண்டன் ஆகியோர் முன்னிலையில் தி.மு.க.வினர் வங்கியின் கேட்டை இழுத்து பூட்டி உள்ளே அமர்ந்து கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தி.மு.க. மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ.வும் அங்கு வந்தார். பின்னர் அவர் தலைமையில் தி.மு.க.வினர் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். பின்னர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடாக நடந்து வருகிறது. ஆளும் கட்சியினர் தங்களுக்கு சாதகமாக தேர்தலை நடத்துகிறார்கள். இது ஜனநாயக படுகொலை ஆகும்”என்றார்.

இதே போல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பகுதி செயலாளர் விருதாசலம் தலைமையில் ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் ராஜேஸ்வரன், முன்னாள் அரசு வக்கீல்கள் தங்கப்பன், குப்புசாமி ஆகியோர் முன்னிலையில் தேர்தல் அதிகாரி வராததால் தேர்தல் அதிகாரி அமரும் நாற்காலியில் வேட்புமனுக்களை வைத்து தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பகுதி செயலாளர் மகேந்திரன், ஒன்றிய செயலாளர் செந்தில்வேலன், அம்மா மக்கள் முன்னேற்றகழக நிர்வாகிகள் துரை, வேங்கை.கணேசன், அய்யாவு, ராஜா, ரவிச்சந்திரன், வக்கீல் ராஜ்மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் நிக்கல்சன் கூட்டுறவு வங்கியின் சுற்றுச்சுவர் கேட்டை இழுத்து பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ஜோதிமகாலிங்கம், பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து 30 நிமிடத்திற்கு பிறகு கேட் திறக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர்.இதேபோல் சண்முகாநகரில் உள்ள சண்முகா கூட்டுறவு பண்டகசாலை தலைவர் மற்றும் இயக்குனர்கள் தேர்தலுக்கு வேட்புமனுக்களைபெற அதிகாரி வராததை கண்டித்து தி.மு.க.வினர் மாவட்ட பொருளாளர்எல்.ஜி.அண்ணா தலைமையிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் முன்னாள் துணை மேயர் மணிகண்டன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் செய்திகள்