திருப்பூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தேர்தல்: தி.மு.க. கூட்டணி கட்சியினர்- அ.தி.மு.க.வினர் கைகலப்பு;போலீஸ் தடியடி

திருப்பூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணி கட்சியினருக்கும் அ.தி.மு.க.வினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.இதையொட்டி போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-05-01 00:00 GMT
திருப்பூர்,

திருப்பூர் குமரன் ரோட்டில் திருப்பூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் 10 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி உள்ளது. 11 நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களில் இருந்து ஒரு தலைவர், துணைத்தலைவர் தேர்வு செய்யப்படுவார்கள். நிர்வாக குழு உறுப்பினர்களை தேர்வு செய்யும் வகையில் கூட்டுறவு சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று வேட்பு மனு தாக்கல் நடந்தது. காலை 6 மணி முதல் வேட்பு மனு பெறுவதற்கு கூட்டுறவு சங்க அலுவலகத்தின் முன்பு ஏராளமானவர்கள் திரண்டனர். அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் மற்றும் அ.தி.மு.க.வினர் கூட்டுறவு சங்க வளாகத்தில் காத்திருந்தனர். காலை 10 மணி அளவில் அலுவலக நுழைவுவாசலின் இரும்பு கதவை பூட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் தலைமையில் கட்சியினர், தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் தலைமையில் தி.மு.க.வினர் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக கூட்டுறவு சங்க அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். முதலில் போலீசார் மறுப்பு தெரிவித்ததால் தள்ளு-முள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அனைவரையும் கூட்டுறவு சங்க அலுவலக வளாகத்துக்குள் போலீசார் அனுமதித்தனர்.

ஆனால் கூட்டுறவு சங்க அலுவலகத்துக்கு முன்பு வேட்பு மனு வாங்குவதற்காக அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் வரிசையில் காத்திருந்தனர். இதனால் மற்ற கட்சியினர் வேட்பு மனு பெறுவதற்கு காலதாமதம் ஏற்பட்டதாக கூறி அங்கிருந்த மாநகர போலீஸ் உதவி கமிஷனர் அண்ணாத்துரை, வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா ஆகியோரிடம் முறையிட்டனர். பின்னர் தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டுறவு சங்க அலுவலக வாசலில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் தர்ணாவில் ஈடுபட்டவர்களுக்கும், அங்கு ஏற்கனவே காத்திருந்த அ.தி.மு.க.வினருக்கும் இடையே திடீர் கைகலப்பு ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் தி.மு.க. கூட்டணி கட்சியினரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். சிலரை குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் அப்புறப்படுத்தினார்கள். அப்போது ஒருவர் போலீசாரை கைகளால் தாக்கியதாக தெரிகிறது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பின்னர் நிலைமையை சமாளிப்பதற்காக போலீசார் தடியடி நடத்தி அங்கிருந்த கூட்டத்தை கலைத்தனர். அங்கு கூடியிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதனால் அலுவலக வளாகம் கலவர பூமியாக காட்சியளித்தது. இந்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். தேர்தலை ரத்து செய்யக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். மறுபுறம் அ.தி.மு.க.வினரும் கோஷங்கள் எழுப்பினார்கள். மாறி, மாறி இரு தரப்பினரும் கோஷங்கள் எழுப்பியதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் கயல்விழி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். நேரம் செல்ல, செல்ல அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இதைத்தொடர்ந்து மதியம் 1 மணி அளவில் தேர்தல் அதிகாரியான சோபாலட்சுமி அங்கு கூடியிருந்தவர்கள் முன்பு வந்து, கலவரம், வன்முறை சம்பவங்களால் தேர்தல் நடத்துவதில் குறுக்கீடு ஏற்பட்டதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தார். பின்னர் இதுதொடர்பான அறிவிப்பு அலுவலகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன், திருப்பூர் மாவட்ட கூட்டுறவு துறை இணை பதிவாளர் குமாரிடம் அளித்த மனுவில், திருப்பூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க அலுவலகத்தில் நடந்த சம்பவம் குறித்தும், கூட்டுறவு சங்க தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்