கூட்டுறவு சங்க தேர்தல்: தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலை மறியல்

கோவையை அடுத்த சோமனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களுக்கு ரசீது வழங்காததால் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-04-30 22:45 GMT
கோவை,

கோவையை அடுத்த சோமனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தலுக்கு நேற்று வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. அப்போது தேர்தல் நடத்தும் அதிகாரி ஒருதரப்பினரிடம் மட்டும் வேட்பு மனுக்களை பெற்றுக்கொண்டதாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தாக்கல் செய்த வேட்பு மனுக்களுக்கு உரிய ரசீது வழங்க வில்லை என்றும் கூறப்படுகிறது.

இதை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் கூட்டுறவு சங்கத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி வெளியே அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் முறையாக தேர்தல் நடத்தக் கோரி கருமத்தம்பட்டி- சோமனூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

கோவை காந்திபுரம் டாடாபாத் பகுதியில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் கணபதி சங்கனூர் கூட்டுறவு பண்டக சாலை உள்ளது. இந்த சங்கத்தில் 11 பேர் கொண்ட நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் பதவிக்கு 15 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரி செந்தில்நாதனிடம் தாக்கல் செய்தனர். மேலும் 60 பேர் வேட்புமனு தாக்கல் செய்ய விண்ணப்பம் கேட்டிருந்தனர். ஆனால் அவர்கள் யாருக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை.

இதனால் அங்கிருந்த அ.தி.மு.க.வினருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அங்கு போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். மேலும் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுந்தர்ராஜ் விரைந்து வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றார். அப்போது தி.மு.க. பகுதி செயலாளர் லோகு தலைமையில் கூட்டணி கட்சியினர் அ.தி.மு.க.வினர் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக கூறினர். சிறிது நேரம் கழித்து அவர்கள் கலைந்து சென்றனர்.

துடியலூர் அருகே சேரன் காலனியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கூட்டுறவு பண்டக சாலை சங்க தேர்தலில் தி.மு.க. உள்பட பிற கட்சியினரின் வேட்புமனுக்களை வாங்க அதிகாரிகள் மறுத்து விட்டதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த கார்த்திக் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் அவரது தலைமையில் தி.மு.க.வினர் வேட்புமனு கொடுக்க முயன்றனர். அவர்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கார்த்திக் எம்.எல்.ஏ., தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்று கூறினார். இதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கோவை துடியலூரில் உள்ள டியூகாஸ் நிறுவனத்தில் நேற்று காலை வேட்புமனு தாக்கல் செய்ய அந்த பகுதி விவசாய சங்கத்தினர் மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் வந்திருந்தனர். அவர்களை, கூட்டுறவு சங்க தேர்தல் அதிகாரி அழைக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து விவசாயி சங்க நிர்வாகி காளிச்சாமி கூறும்போது, இந்த நிறுவனத்தில் 15 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். முறையாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வில்லை. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடைபெற்று இருந்த நிலையில் தேர்தல் அறிவிப்பு செய்தது முறையற்றது. மேலும் மனுதாக்கல் செய்ய வந்தவர்களை மனு தாக்கல் செய்யவிடாமல் தடுப்பது ஜனநாயக விரோதமான செயல் ஆகும் என்றார்.

மேலும் செய்திகள்