கூட்டுறவு சங்க வேட்பாளர் பட்டியல் ஒட்டாததை கண்டித்து தேர்தல் அதிகாரியை தினகரன் அணியினர் சிறை பிடித்ததால் பரபரப்பு

கோத்தகிரி பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க தேர்தலில் வேட்பாளர் பட்டியல் ஒட்டாததை கண்டித்து தேர்தல் அதிகாரியை தினகரன் அணியினர் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2018-04-30 23:00 GMT
கோத்தகிரி,

கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கம் (ஜே 34) செயல்பட்டு வருகிறது. இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் 11 நிர்வாக இயக்குனர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 7-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்பு மனு தாக்கல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் எனவும் இதை தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் அதிகாரப்பூர்வமான வேட்பாளர் பட்டியல் சங்க அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, நேற்று காலை 10 மணிக்கு ஆவின் விரிவாக்க அலுவலரும், கூட்டுறவு தேர்தல் அதிகாரியுமான ரமேஷ் சங்க அலுவலகத்திற்கு வந்தார். ஆனால் உறுப்பினர் ரசீது புத்தகம் கொண்டு வராமல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்களுக்கும், தேர்தல் அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 11.30 மணியளவில் ரசீது புத்தகம் கொண்டு வரப்பட்டதையடுத்து வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

மாலை 5 மணி வரை 17 பேர் நிர்வாக இயக்குனர்களாக போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து 5.30 மணியளவில் வேட்பாளர் இறுதி பட்டியலை வெளியிடுமாறும், அறிவிப்பு பலகையில் ஒட்ட வலியுறுத்தியும் தினகரன் அணியினர் தேர்தல் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் தேர்தல் அதிகாரி அறிவிப்பு பலகையில் பட்டியலை ஒட்டாததால் அவரை சங்க அலுவலகத்தில் இருந்து வெளியே செல்ல விடாமல் சிறை பிடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நசீர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தினகரன் அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து தேர்தல் அதிகாரி வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் பெயர்களை தெரிவித்தார். இதனை தொடர்ந்து தினகரன் அணியினர் தேர்தல் அதிகாரியை விடுவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தினகரன் அணியின் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் மற்றும் நகர செயலாளர் வாப்பு ஆகியோர் கூறுகையில் கூட்டுறவு தேர்தல் நியாயமாக நடத்தப்பட வேண்டும். 17 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். அவர்கள் பெயர்கள் விடுபட்டாலோ புதியதாக ஏதேனும் பெயர்கள் சேர்க்கப்பட்டாலோ சட்டபடியான நடவடிக்கை எடுக்க கட்சி மேலிடத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்வோம் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்