கடந்த 4 மாதங்களில் மாயமான 40 பெண்களில் 34 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் மாயமான 40 பெண்களில் 34 பேர் மீட்கப்பட்டு அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

Update: 2018-04-30 22:45 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள உழவர் சந்தை அருகே நேற்று மாவட்ட போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி தலைமை தாங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவரும் பேரணியில் கலந்துகொண்டார்.

அப்போது வழிநெடுகிலும் அவர், வாகன ஓட்டிகள், பொதுமக்களிடம் சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுரைகளை வழங்கியதுடன், அதுதொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.

பேரணியில் திரளான மாணவ-மாணவிகள், போலீசார் கலந்துகொண்டனர். உழவர் சந்தையில் இருந்து புறப்பட்ட பேரணி திருவள்ளூர் பஸ் நிலையம், தேரடி வழியாக சென்று காமராஜர் சிலை அருகே முடிவடைந்தது.

பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி, நிருபர்களிடம் கூறியதாவது.

உரிய அனுமதி இல்லாமல் வாகனங்களை ஓட்டக்கூடாது. இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டும். செல்போன் பேசிக்கொண்டும், மது அருந்திவிட்டும் கண்டிப்பாக வாகனங்களை ஓட்டக்கூடாது.

விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்க வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மதித்து நடக்கவேண்டும். சாலை விதிகளையும், போக்குவரத்து விதிகளையும் வாகன ஓட்டிகள் கடைப்பிடித்து சென்றால் விபத்துகளை தவிர்க்க முடியும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, ஊத்துக்கோட்டை போன்ற போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 1-1-2018 முதல் இதுவரை 40 பெண்கள் மாயமானதாக போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு 34 பேரை கண்டுபிடித்து அவர்களின் பெற்றோர்களிடம் ஓப்படைத்து உள்ளனர்.

மீதமுள்ள 6 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களையும் விரைவில் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் சமூக வலைத்தளங்களான முகநூல், ‘வாட்ஸ் அப்’களில் இது தொடர்பாக தவறான தகவல்கள் பரவி வருகிறது. இது முற்றிலும் தவறு. வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்