சங்ககிரி சென்னகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

சங்ககிரி சென்னகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2018-04-29 22:16 GMT
சங்ககிரி,

சங்ககிரியில் பிரசித்தி பெற்ற சோமேஸ்வரர் மற்றும் சென்னகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேர்த்திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தினமும் இரவு 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் அதை கண்டு தரிசித்தனர்.

7-வது நாள் திருவிழா அன்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. திருக்கல்யாணம் முடிந்ததும் சுவாமி புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். நேற்று முன்தினம் குதிரை வாகனத்தில் சாமி திருவீதி உலா நடந்தது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி சென்னகேசவ பெருமாள் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார். மாலை 5 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருத்தேரை சங்ககிரி எம்.எல்.ஏ. ராஜா, சங்ககிரி உதவி கலெக்டர் ராமதுரை முருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், திருவிழா ஆலோசனை குழு தலைவர் என்.எம்.எஸ். மணி உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் தேர் நிலை திடலில் இருந்து தேர்வீதி, மலையடிவாரம், முஸ்லிம் தெரு வழியாக சென்று நிலையை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரில் எழுந்தருளிய சென்னகேசவ பெருமாளை வழிபட்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், சங்ககிரி இந்து சமய அறநிலைய துறை ஆய்வாளர் சரவணன், செயல் அலுவலர் விஸ்வநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்