கூவம் ஆற்றுப்படுகையில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் பெரும்பாக்கம் அருகே புதிய குடியிருப்புகள் ஒதுக்கீடு

சென்னை அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றுப்படுகையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றும்பணி நேற்று தொடங்கியது.;

Update:2018-04-29 05:15 IST
சென்னை,

சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி கூவம் ஆற்றுப்படுகை உள்பட நீர்நிலைப்பகுதி ஓரங்களில் குடியிருப்போர் தங்கள் குடியிருப்புகளை இழந்து தவித்தனர். எனவே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நீர்நிலைப்பகுதி ஓரங்களில் குடியிருப்போரை மீள்குடியேற்றம் செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன.

சென்னை அண்ணாநகர் (மண்டலம்-8) மாநகராட்சி மண்டலத்துக்கு உட்பட்ட அரும்பாக்கம் என்.எஸ்.கே.நகர் 100-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் செல்லும் கூவம் ஆற்றுப்படுகையின் ஓரமாக சாலையோரம் 304 வீடுகள் அமைக்கப்பட்டு, அதில் சுமார் 1,200-க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர். இவர்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு ‘சர்வே’ எடுக்கப்பட்டது. அவர்களுக்கான வீடுகள் கட்டித்தர இடம் தேர்வு பணிகளும் மும்முரமாக நடந்து வந்தன.

பெரும்பாக்கத்தில் புதிய குடியிருப்பு

இந்தநிலையில் சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில்நகர் அருகே குடிசை மாற்று வாரியம் சார்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. புதிய குடியிருப்புகள் தயாரான நிலையில், தற்போது வாழ்ந்து வரும் வீடுகளை ஏப்ரல் 28-ந்தேதிக்குள் (அதாவது நேற்று) காலி செய்யுமாறு ‘நோட்டீசு’ வழங்கப்பட்டது.

அதன்படி, என்.எஸ்.கே.நகரில் கூவம் ஆற்றின் கரையோரம் வாழ்ந்து வருவோரை அப்புறப்படுத்தும் பணி நேற்று காலை 8 மணியளவில் தொடங்கியது. முன்னதாக அங்கு வசிப்போரிடம், அண்ணாநகர் மண்டல முதன்மை அதிகாரி பரந்தாமன், முதன்மை செயற்பொறியாளர் நாச்சான் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் மீள்குடியேற்றம் குறித்து தெளிவாக எடுத்துரைத்தனர். அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் உடமைகளுடன், மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள லாரிகளில் ஏறி புறப்பட்டு சென்றனர்.

இன்னும் 2 நாட்களில்...

நேற்று மாலை வரை 80-க்கும் மேற்பட்ட வீடுகள் காலிசெய்யப்பட்டு, அங்கிருந்தோர் பெரும்பாக்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். “மீள்குடியேற்ற பணி இன்னும் 2 நாட்களில் முடிவடையும் என்றும், அதனைத்தொடர்ந்து வீடுகள் இடிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்”, என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆவணங்கள் கிடைக்க சிறப்பு முகாம்

மீள்குடியேற்றம் செய்யப்படும் மக்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை, புதிய ரேஷன் அட்டை (ஸ்மார்ட் கார்டு), மின்சார இணைப்பு அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதில் மக்கள் தங்கள் விவரங்களை கூறி ஆவணங்கள் பெறுவதற்கான பதிவு செய்துகொண்டனர்.

மீள் குடியேற்றம் செய்யப்படுவோரின் குழந்தைகள், விரும்பிய அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தற்போது படிக்கும் பள்ளிகளில் இருந்து மாற்று சான்றிதழ் (டி.சி.) பெற்று தரவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

மேலும் செய்திகள்