திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சித்திரைத்திருவிழா தேரோட்டம்

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சித்திரைத்திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது.

Update: 2018-04-28 23:15 GMT
முருகபவனம், 

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சித்திரைத்திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் அபிராமி அம்மன்-பத்மகிரீசுவரர், ஞானாம்பிகை-காளகத்தீசுவரருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, மாலையில் சுவாமி-அம்பாள் வீதிஉலா நடக்கிறது. நேற்று முன்தினம் அபிராமி அம்மன்-பத்மகிரீசுவரர் திருக்கல்யாணம் நடந்தது.

அதனைத்தொடர்ந்து சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 10.30 மணியளவில் மூலவருக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து பூஜை, தீபாராதனை செய்யப்பட்டது.

அதன்பிறகு பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடந்தது. மாலை 5.15 மணியளவில் அலங்கரிக்கப்பட்டு தேரடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருத்தேருக்கு கோவிலில் இருந்து சுவாமி புறப்பாடு நடந்தது. இதையடுத்து சிறப்பு பூஜை, தீபாராதனை செய்யப்பட்டு திருத்தேர் வடம் பிடித்தல் தொடங்கியது.

இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.எஸ்.எம். குரூப் நிர்வாக இயக்குனர் வேலுச்சாமி, முன்னாள் மேயர் மருதராஜ், திண்டுக்கல் வர்த்தகர் சங்க துணை தலைவர் ஜி.சுந்தரராஜன், நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேர் நகரின் 4 ரதவீதிகளில் வலம் வந்து தேரடியை அடைந்தது. வழியெங்கிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதன்பிறகு இரவு 9 மணியளவில் சுவாமி-அம்பாள் திருத்தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

அதேபோல் சாணார்பட்டி அருகேயுள்ள ஆவிளிபட்டி ஆதிசுயம்பு ஈஸ்வரர்-அபிராமி கோவிலில், மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் திருமாங்கல்ய கயிறு, மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டன. இறுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர் உதயகுமார் செய்து இருந்தார்.

மேலும் செய்திகள்