சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் போலீசார் தீவிர சோதனை

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

Update: 2018-04-24 22:37 GMT
கருப்பூர்,

சேலம் அருகே கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட இணைவு பெற்ற கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம ஆசாமி ஒருவன் போன் செய்தான்.

அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் போனை எடுத்து பேசினார். அப்போது மறுமுனையில் பேசிய மர்ம ஆசாமி, ‘சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளோம். சிறிது நேரத்தில் அது வெடிக்கும்‘ என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்துவிட்டான்.

பின்னர் இதுகுறித்து உடனடியாக சேலம் மாநகர உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் பல்கலைக்கழகம் முழுவதும் அங்குலம், அங்குலமாக மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை நடத்தினர்.

மேலும் பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள 28 துறை அலுவலகங்கள், நூலகம், கலையரங்கம், நிர்வாக அலுவலக அறைகள் உள்ளிட்டவைகளிலும் கடும் சோதனை செய்யப்பட்டது. இதுதவிர தேர்வு கட்டுப்பாட்டு அலுவலக அறையில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய விடைத்தாள் பண்டல்களையும் எடுத்து சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்தது. சோதனை முடிவில் எதுவும் சிக்கவில்லை.

சென்னை போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு மர்ம ஆசாமி பேசிய போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சேலம் ஆத்துக்காடு பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் இருந்த ஒரு ரூபாய் நாணயம் போன் மூலம் மர்ம ஆசாமி பேசியது தெரியவந்தது. இதையடுத்து போனில் பேசி மிரட்டல் விடுத்த அந்த மர்ம ஆசாமியை சூரமங்கலம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டல் குறித்து சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல் நிருபர்களிடம் கூறும்போது, ‘பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்த மிரட்டலை தொடர்ந்து பல்கலைக்கழகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. மேலும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விரைவில் பல்கலைக்கழகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். சைபர் கிரைம் குறித்த டிப்ளமோ பாடப்பிரிவு தொடங்கப்பட்டு இதுபோன்ற மிரட்டல்களை கண்டுபிடிக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்படும்‘ என்றார்.'

மேலும் செய்திகள்