அந்தேரியில் போலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி கைது
அந்தேரியில், போலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை,
அந்தேரியில், போலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி நம்பர் பிளேட்
மும்பை அந்தேரி மேற்கு, டி.என்.நகர் இட்கா மைதானம் அருகே சம்பவத்தன்று மாலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரின் நம்பர் பிளேட்டில் டெல்லியை சேர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் கமிஷனர் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை மறிந்து அதில் இருந்தவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது காரில் இருந்தவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
எனவே போலீசார் அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர், காரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரி என போலி நம்பர் பிளேட்டை பொருத்திக்கொண்டு வலம் வந்தது தெரியவந்தது.
தொழில் அதிபர் கைது
மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி என அவர் வைத்திருந்த போலி அடையாள அட்டை ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து நடந்த விசாரணையில், போலி நம்பர் பிளேட், அடையாள அட்டையுடன் சிக்கியவர் தென்மும்பை லமிங்டன் ரோட்டை சேர்ந்த தொழில் அதிபர் சுபின் குவாடியா (வயது40) என்பது தெரியவந்தது. இவரது அலுவலகம் அந்தேரி லெட்சுமி தொழிற்பேட்டை பகுதியில் உள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தொழில் அதிபர் சுபின் குவாடியாவை கைது செய்தனர். அவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரி என கூறி யாரிடமாவது மோசடியில் ஈடுபட்டரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.