எடப்பாடியில் முதல்-அமைச்சர் பங்கேற்கும் விழா ஏற்பாடுகள் தீவிரம் கலெக்டர் ரோகிணி ஆய்வு

எடப்பாடியில் நாளை மறுநாள் நடைபெறும் அரசு விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். இந்த விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்கான முன்னேற்பாடுகளை கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்தார்.

Update: 2018-04-24 22:26 GMT
எடப்பாடி,

எடப்பாடி நகராட்சி பொன்விழா ஆண்டு சிறப்பு நிதியில் பஸ் நிலையத்தில் ரூ.1¼ கோடியில் வணிகவளாக கடைகள், சந்தைபேட்டையில் ரூ.2½ கோடியில் வணிகவளாகம் மற்றும் மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.

இதன் திறப்பு விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) எடப்பாடி ஈஸ்வரன் கோவில் அருகில் நடைபெற உள்ளது. இந்த விழாவில், பஸ் நிலையம் அருகில் ரூ.3 கோடி செலவில் தினசரி மார்க்கெட் மற்றும் வணிகவளாகம் கட்டவும், ரூ.3 கோடி செலவில் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் மேற்கொள்வதற்கான பூமிபூஜையும் மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.

இதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்தும், பூமிபூஜையை தொடங்கி வைத்தும் ஏழை-எளியவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே விழா நடைபெறும் இடத்தை நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி பார்வையிட்டார். பின்னர் விழா முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாக ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன், சங்ககிரி உதவி கலெக்டர் ராமதுரைமுருகன், தாசில்தார் கேசவன், ஆணையாளர் முருகன், முன்னாள் நகரசபை தலைவர் கதிரேசன், துணைத்தலைவர் ராமன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்