தேனி அருகே 3 திருமணம் செய்த மத்திய ரிசர்வ் போலீஸ்காரர் மீது வழக்கு: முதல் மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை
தேனி அருகே 3 திருமணம் செய்த மத்திய ரிசர்வ் போலீஸ்காரர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதல் மனைவி கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.
தேனி,
தேனி அருகே உள்ள தாடிச்சேரியை சேர்ந்த வேலு மகன் தவமணி (வயது 34). இவர், மராட்டிய மாநிலம் நாசிக் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படைப்பிரிவில் (சி.ஆர்.பி.எப்.) போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி அழகுராணி. இவர்களுக்கு கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இந்தநிலையில் தவமணி மேலும் 2 பெண்களை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் அழகுராணி ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில், ‘திருமணத்தின் போது எனது பெற்றோர் சீதனமாக ரூ.1 லட்சம் மற்றும் 10 பவுன் நகைகளை கொடுத்தனர். அதை வாங்கி எனது பெயரில் நிலம் வாங்குவதாக கூறி எனது மாமனார் பெயரில் நிலம் வாங்கி விட்டனர். மேலும், டானா தோட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை தவமணி 2-வது திருமணம் செய்துள்ளார். அதை தட்டிக் கேட்டவுடன், ஊரில் வைத்து பேசி அந்த பெண்ணை பிரிந்து விட்டார். தற்போது வேறு ஒரு பெண்ணை 3-வதாக திருமணம் செய்துள்ளதாக தெரியவந்தது. இதுகுறித்து கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் கேட்ட போது அனைவரும் ஒன்று சேர்ந்து என்னை அசிங்கமாக பேசி, கத்தியால் குத்த முயன்றனர்’ என்று கூறியிருந்தார்.
இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க தேனி அனைத்து மகளிர் போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உமாதேவி விசாரணை நடத்தி, அழகுராணியின் கணவர் தவமணி, மாமனார் வேலு, மாமியார் அழகம்மாள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.