நாமக்கல் அருகே லாரி மீது கார் மோதல்; பெண் பரிதாப சாவு 4 பேர் காயம்

நாமக்கல் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2018-04-24 23:00 GMT
நாமக்கல்,

கரூர் மாவட்டம் பரமத்தியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 35). இவர் சென்னையில் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று ஒரு காரில் சென்னையில் இருந்து நாமக்கல் வழியாக குடும்பத்தினருடன் பரமத்தி நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

இவர்களது கார் நாமக்கல் அருகே உள்ள வள்ளிபுரம் மேம்பாலம் அருகே வந்தபோது முன்னால் சென்று கொண்டு இருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.

பெண் சாவு

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரவிச்சந்திரனின் மனைவி பிரியா (28) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதேபோல் ரவிச்சந்திரன், அவரது 6 மாத கைக்குழந்தை சான்யா, மற்றொரு குழந்தை சாலினி (5), மாமியார் சந்திரா (47) ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு இங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்