நாய் பண்ணையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்

நாய் பண்ணையை அகற்றக்கோரி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-04-24 23:00 GMT
நாகர்கோவில்,

தோவாளை தாலுகாவுக்கு உட்பட்ட ஈசாந்திமங்கலத்தில் அண்ணா காலனி உள்ளது. இங்கு சுமார் 110 வீடுகள் உள்ளன. இந்த காலனியில் ஒருவர் நாய் பண்ணை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நாய் பண்ணையால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் நாய் பண்ணையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன் புகார் மனு கொடுத்தனர்.

ஆனால் அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நேற்று அப்பகுதி பொதுமக்கள் ஜாண் விக்டர் தாஸ் தலைமையில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தின் வாசலில் அமர்ந்து திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட ஜாண் விக்டர்தாஸ் உள்ளிட்ட சிலரை மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோவனை சந்திக்க ஏற்பாடு செய்தனர். அவரிடம், போராட்டம் நடத்தியவர்கள் தங்கள் பகுதியில் உள்ள நாய் பண்ணையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

சில நாட்களில் அந்த நாய்பண்ணையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிஉறுதி அளித்தார். அதைத்தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்