செங்கோட்டையில் கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் 3 பெண்கள் தப்பி ஓட்டம்
கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசியை செங்கோட்டையில் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தப்பி ஓடிய 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கோட்டை,
கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசியை செங்கோட்டையில் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தப்பி ஓடிய 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சோதனை சாவடி
நெல்லை மாவட்டத்துக்கு அருகில் கேரள மாநிலம் அமைந்திருப்பதால் ரெயில் மூலம் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது. பின்னர் அகல ரெயில் பாதை பணிக்காக இந்த வழித்தடத்தில் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரேஷன் அரிசி மற்றும் புகையிலை பொருட்கள் சாலை போக்குவரத்து வழியாக கடத்தப்பட்டு வந்தது.
இதற்காக தமிழக- கேரள எல்லையான நெல்லை மாவட்டம் புளியரையில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்படி இருந்தும் அவ்வப்போது ரேஷன் அரிசி, கஞ்சா, புகையிலை பொருட்கள் கடத்தும் சம்பவம் நடந்து வருகிறது.
ரேஷன் அரிசி கடத்தல்
பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது செங்கோட்டை- புனலூர் அகல ரெயில் பாதையில் ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இதற்கிடையே தாம்பரம்- கொல்லம் வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயிலில் நேற்று அதிகாலை ரேஷன் அரிசி கடத்தி வருவதாக செங்கோட்டை ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ஞான ஆனந்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி நேற்று அதிகாலை செங்கோட்டைக்கு வந்த தாம்பரம்- கொல்லம் ரெயிலை ரெயில்வே போலீசார் சோதனையிட்டதில் 27 மூட்டைகளில் சுமார் 800 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
3 பெண்கள் தப்பி ஓட்டம்
தொடர்ந்து நடத்திய விசாரணையில், ரேஷன் அரிசியை பயணிகள் இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்து கொண்டு வந்ததும், அதனை மேலக்கடையநல்லூரை சேர்ந்த வெள்ளத்தாய், கடையநல்லூரை சேர்ந்த உமா, கொடிக்குறிச்சியை சேர்ந்த பேச்சியம்மாள் ஆகியோர் கடத்தி வந்ததும் தெரியவந்தது. பின்னர் 27 மூட்டை ரேஷன் அரிசியை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்து, உணவு கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர். தப்பி ஓட்டம் பிடித்த 3 பெண்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.