கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனை விவகாரம்: அ.தி.மு.க.வினர் திடீர் சாலை மறியல்

சிவன்மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பு மனு பரிசீலனை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க.வினர் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ள்ளார்.

Update: 2018-04-24 22:30 GMT
காங்கேயம்,

காங்கேயம் அருகே சிவன்மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க.வினர் இரண்டு கோஷ்டிகளாகவும், தி.மு.க.வினர் இரண்டு கோஷ்டிகளாகவும் பிரிந்து தேர்தல் களத்தை சந்தித்து வருகிறார்கள். இதற்கிடையில் இந்த சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவரும், தி.மு.க. பிரமுகருமான ஆர்.எம்.கந்தசாமி, “ சிவன்மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல் நியாயமாக நடத்த போலீஸ் பாதுகாப்பு வேண்டும், தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும்” என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இதை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி கடந்த 9-ந்தேதி நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனு தாக்கல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. மேலும் வேட்பு மனு தாக்கல் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது. அதன்படி அன்று 60 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது. வேட்பு மனு பரிசீலனையும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இறுதியில் 29 வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 31 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் அ.தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர் மைனர் பழனிசாமி தலைமையில் நேற்று அ.தி.மு.க. வினர் சங்க கூட்டுறவு சங்க அலுவலகம் சென்று தேர்தல் அதிகாரி முத்துபாரதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அ.தி.மு.க.வினரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் அதிகாரி தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்கள். அப்போது வேட்பு மனு பரிசீலனை முறைப்படி நடந்துள்ளது என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

ஆனாலும் அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காங்கேயம்-திருப்பூர் சாலையில் அ.தி.மு.க.வினர் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். அப்போது தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் காங்கேயம் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தைநடத்தினார்கள்.

மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக சிவன்மலை கூட்டுறவு சங்க தேர்தல் ஒத்தி வைக்கப்படுகிறது என்று சங்க அவலகத்தில் நோட்டீசு ஒட்டப்பட்டது. இதையடுத்து சாலைமறியலை கைவிட்டு அ.தி.மு.க.வினர் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரபை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்