திருப்பூரில், சொகுசு பங்களாவை மாதவாடகைக்கு எடுத்து இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர்கள் 4 பேர் கைது

திருப்பூரில் சொகுசு பங்களாவை ரூ.25 ஆயிரத்திற்கு மாத வாடகைக்கு எடுத்து இளம் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய விபசார புரோக்கர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-04-24 22:30 GMT
நல்லூர்,

தொழிலாளர்கள் நிறைந்துள்ள திருப்பூரில் நடைபெறும் குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். குறிப்பாக வழிப்பறி ஈடுபடும் நபர்களை பிடிக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். இதற்கிடையில் திருப்பூர் மாநகர் பகுதியில் வெளியூரை சேர்ந்த இளம்பெண்களை அழைத்து வந்து, விபசாரத்தில் ஈடுபடுத்துவதாகவும், குறிப்பாக குளிர்சாதன வசதி கொண்ட குளுகுளு வசதிகளுடன் கூடிய சொகுசு பங்களாவில் விபசாரம் நடப்பதாக மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

திருப்பூர் நல்லூர் அமர்ஜோதி கார்டன் ஏ.எஸ்.நகர் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் உள்ள சொகுசு பங்களாவில் கடந்த சில மாதங்களாக அதிக எண்ணிக்கையில் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் ஆண்கள் வந்து செல்வதாகவும், ஆனால் அவர்கள் அங்கிருந்து போகும்போது எந்த பொருட்களையும் எடுத்து செல்வது இல்லை என்றும், எனவே அங்கு விபசாரம் நடக்கலாம் என்றும் மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த குறிப்பிட்ட பகுதிக்கு சென்று சோதனைசெய்யுமாறு திருப்பூர் தெற்கு மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பந்தப்பட்ட பகுதிக்கு திருப்பூர் தெற்கு மகளிர் போலீசார் சென்றனர். அப்போது அந்த பங்களா பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த பங்களாவை சுற்றி வளைத்தனர்.

அந்த பங்களாவில் தனித்தனியாக 3 அறைகள் இருந்தன. அவற்றின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து பெண் போலீசார் திடீரென்று சென்று கதவுகளை தட்டினார்கள். ஆனாலும் கதவுகள் திறக்கப்படவில்லை. நீண்டநேரத்திற்கு பிறகு கதவுகள் திறக்கப்பட்டன. அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட 6 இளம்பெண்களை மகளிர் போலீசார் மீட்டு கோவை துடியலூரில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து போலீசார், இவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது யார் என்று விசாரித்தனர். விசாரணையில் திருப்பூர் கோவில்வழியை சேர்ந்த ஆனந்தா (வயது 41), செவந்தாம்பாளையம் குதிரை முக்கு வீதியை சேர்ந்த ரவி (41), ஏ.எஸ்.நகர். முதல் வீதியை சேர்ந்த ஜெயகோபால் (29), சேரன் தொழிலாளர் காலனியை சேர்ந்த முருகானந்தம் (24) ஆகியோர் இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து விபசார புரோக்கர்களாக செயல்பட்ட ஆனந்தா உள்பட 4பேரையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன் லைனில் வியாபாரம் செய்யப்போவதாக அந்த சொகுசு பங்களாவின் உரிமையாளரிடம் வாடகைக்கு கேட்டுள்ளார். இதை நம்பிய பங்களாவின் உரிமையாளர், அந்த பங்களாவை இவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளார். ஆனால் அவர்கள் ஆன் லைனில் வியாபாரம் செய்வதுபோல் வாடிக்கையாளர்களை வரவழைத்துள்ளனர். வீட்டின் உரிமையாளரும் ஆன்லைனின்தான் வியாபாரம் நடக்கிறது என்று நம்பி உள்ளார்.

ஆனால் பங்களாவை வாடகைக்கு எடுத்தவர்கள் ஆன் லைன் வியாபாரம் செய்யவில்லை என்றும், அங்கு வாடிக்கையாளர்களை ஆன்லைனில் தொடர்பு கொண்டு அவர்களை வரவழைத்து அவர்களுக்கு இளம் பெண்களை சப்ளை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. தினமும் அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் வந்து செல்வதால் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு போலீசாருக்கு தெரிவித்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மேலும் செய்திகள்