சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் பெண் தீக்குளிக்க முயற்சி
சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக பா.ம.க. பிரமுகர் மீது அவர்கள் புகார் தெரிவித்தனர்.;
சேலம்,
சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா மோட்டூர் இடங்கணசாலை கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி காந்திமதி(வயது 55). இவர் தனது மகன்களான ஈஸ்வரன், சதீஷ்குமார், வினோத்குமார், மகள் புவனேஸ்வரி, மருமகள் ராஜேஸ்வரி ஆகியோருடன் நேற்று மதியம் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு திடீரென தாங்கள் பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேகமாக சென்று அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காந்திமதி உள்ளிட்டோர் மீது போலீசார் தண்ணீரை ஊற்றினர்.
நிலத்தை அபகரிக்க முயற்சி
அதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர்கள் கூறியதாவது:-
எங்களுக்கு சொந்தமான பூர்வீக நிலம் மற்றும் கடை எங்கள் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தை பா.ம.க. பிரமுகர் ஒருவர் அபகரிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். மேலும் அவர், அடியாட்களை அழைத்து வந்து நிலத்தை கிரயம் செய்யக்கோரி கையெழுத்திடுமாறு மிரட்டி வருகின்றார். இதுதொடர்பாக மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த நாங்கள் தற்கொலை செய்யும் நோக்கத்தில் இங்கு வந்தோம். நிலத்தை அபகரிப்பவர் மீது நடவடிக்கை எடுத்து எங்களுடைய உயிருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் இதுதொடர்பாக கலெக்டர் ரோகிணியை சந்தித்து அவர்கள் மனு கொடுத்தனர்.