தாம்பரம் அருகே ஜாமீனில் வெளியே வந்த ரவுடி வெட்டிக்கொலை
தாம்பரம் அருகே ஜாமீனில் வெளியே வந்த ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
படப்பை,
சென்னை கொருக்குப்பேட்டை ரெயில்வே நிலையம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 31). ரவுடியான இவர் மீது 2 கொலை வழக்குகள் மற்றும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அதில் ஒரு வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற ஸ்டாலின், கடந்த வாரம்தான் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
நேற்று காலை ஸ்டாலின், தாம்பரம் அருகே முடிச்சூர் பகுதியில் உள்ள தனது நண்பரை பார்க்க வந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம நபர்கள், ஸ்டாலினை வழிமறித்து வீச்சரிவாளால் வெட்ட முயன்றனர்.
வெட்டிக்கொலை
அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸ்டாலின், கொலையாளிகளிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடினார். ஆனால் கொலையாளிகள் அவரை ஓட ஓட விரட்டிச்சென்று வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வரதராஜபுரம் அருகே அவரை சரமாரியாக வெட்டினர். இதில் கை, கால், முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த ஸ்டாலின் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
அவர் இறந்துவிட்டதை உறுதி செய்துகொண்ட கொலையாளிகள், அவரது உடல் அருகே மலர் மாலையை வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும், சோமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலையான ரவுடி ஸ்டாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முன்விரோதம் காரணமா?
மேலும் இதுபற்றி சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி ஸ்டாலினை முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
ரவடி ஸ்டாலினுக்கு திருமணமாகி ஷோபனா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.