கொள்கையில் முரண்பாடு கொண்ட சிவசேனாவுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது

கொள்கையில் முரண்பாடு கொண்ட சிவசேனா கட்சியுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோரா கூறினார்.

Update: 2018-04-23 22:44 GMT
மும்பை,

மராட்டியத்தில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தன. இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் இந்த இரு கட்சிகளும் கூட்டணியை முறித்துக்கொண்டு தனித்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்தன. அந்த தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி அமோக வெற்றிபெற்றது.

இந்தநிலையில் வருகிற 2019-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையே மீண்டும் கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் சிவசேனா கட்சி வருகிற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடப்போவதாக தெரிவித்து இருக்கிறது.

இது குறித்து முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான மிலிந்த் தியோரா நிருபர்களிடம் கூறியதாவது.

காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைவதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. இன்னும் சில நாட்களில் தொகுதி பங்கீடு குறித்து அறிவிக்கப்படும். தேசியவாத காங்கிரஸ் மட்டுமின்றி நாட்டின் நலனில் ஒருமித்த கருத்துடைய கட்சிகளுக்கும் கூட்டணி குறித்து அழைப்பு விடுத்து வருகிறோம்.

இந்தநிலையில் சிலர் சிவசேனாவுடன் கூட்டணி வைக்கும் திட்டம் இருக்கிறதா என கேட்கிறார்கள். வெளிப்படையாக கூற வேண்டும் எனில் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதை சிந்தித்து பார்க்க கூட விரும்பவில்லை. சிவசேனாவுக்கும் எங்களுக்குமான கொள்கை முற்றிலும் முரண்பட்டவை.

சிவசேனா மற்றும் நவநிர்மாண் சேனா போன்ற கட்சிகள் வட இந்தியர்கள், தென் இந்தியர்கள், மார்வாடி, ஜெயின் போன்ற பிரிவினர்களை மராட்டியர்களாக பார்க்கவில்லை. இதுபோன்றவர்களுடன் காங்கிரஸ் ஒருபோதும் கூட்டணி வைக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் தலைவர் டி.பி.திரிபாதி, சிவசேனா கட்சி மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என கூறியிருப்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து மிலிந்த் தியோரா கூறுகையில், ‘வரலாற்றை பார்க்கும்போது சிவசேனா மதச்சார்பின்மை மற்றும் பன்மைத்துவத்துக்கு எப்போதும் அச்சுறுத்தலாக இருந்து வந்ததாகவே தெரிகிறது. பா.ஜனதாவை விமர்சிப்பதால் மட்டும் ஒரு கட்சி காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற முடியும் என கூற முடியாது’ என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்