மலாடில் துப்பாக்கியால் சுடப்பட்ட சிவசேனா பிரமுகர் பலி

மலாடில் துப்பாக்கியால் சுடப்பட்ட சிவசேனா பிரமுகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-04-23 22:40 GMT
மும்பை,

மும்பை மலாடு கிழக்கு, குரார் கிராமம் கோகுல் நகர் பகுதியை சேர்ந்தவர் சச்சின் சாவந்த்(வயது46). சிவசேனா பிரமுகர். இவர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் கோகுல் நகர் பகுதியில் காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் முகவரி கேட்பது போல காரை வழிமறித்தனர்.

இதில், மோட்டார் சைக்கிள் பின்னால் இருந்தவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென சச்சின் சாவந்தை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில், உடலில் 4 குண்டு பாய்ந்து அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

இந்தநிலையில் துப்பாக்கியால் சுட்ட மர்மநபர்கள் அங்கு இருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி பொதுமக்கள் சச்சின் சாவந்தை மீட்டு காந்திவிலி சதாப்தி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் இரவு 11 மணியளவில் அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே தகவல் அறிந்து வந்த குரார் போலீசார் சச்சின் சாவந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போரிவிலி பகவதி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளிகளை தேடிவருகின்றனர். சொத்து பிரச்சினை அல்லது கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து எல்லா கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவசேனா பிரமுகர் கொலை சம்பவத்தால் மலாடு பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்