வடமதுரை அருகே பரபரப்பு: தென்னை மரங்களில் மனித மண்டை ஓடுகள்

வடமதுரை அருகே தென்னை மரங்களில் மனித மண்டை ஓடுகள் கட்டி வைக்கப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-04-23 22:30 GMT
வடமதுரை, 

வடமதுரை அருகே உள்ள கொண்டையம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தின் எல்லையில் உள்ளது. அந்த பகுதியில் புத்தாநத்தம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு தென்னந்தோப்பு உள்ளது. இந்த தென்னந்தோப்பில் உள்ள மரங்களில் மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்பு துண்டுகள் கட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்த வழியாக நடந்து சென்றவர்கள் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் புத்தாநத்தம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த தென்னந்தோப்பில் கடந்த சில நாட்களாக இளநீர் மற்றும் தேங்காய்கள் திருடு போய்க்கொண்டே இருந்துள்ளது. இதனால் தேங்காய் திருடுவோரை பயமுறுத்துவதற்காக தோப்பு உரிமையாளர் தான் மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகளை கட்டி வைத்தது தெரியவந்தது. அந்த எலும்பு கூடுகளை எந்த இடத்தில் தோண்டி எடுத்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்