அரியலூர் மாவட்டங்களில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2018-04-23 22:45 GMT
அரியலூர்,

அரியலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார், வருவாய் அதிகாரி தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை ஒளிபரப்பு செய்தல், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் கூடுதல் அவசர விபத்து மற்றும் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்துதல்.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ரோந்து குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு இரவு, பகலாக போக்குவரத்து விதி மீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. டிரைவர்கள் அனைவரும் சாலை விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். விபத்தில்லா பயணங்கள் மேற்கொள்ள சீரான வேகத்தில் பயணிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் நியமிக்கப்படும் டிரைவர்கள் தகுதியான, திறமை வாய்ந்தவர்களை பணியில் அமர்த்த வேண்டும். வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்று கூறினார்.

கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் ஜெயங்கொண்டம் சாலை, பஸ் நிலையம், மார்க்கெட் தெரு, தேரடி, சத்திரம், மேல அக்ரஹாரம் வழியாக காமராஜர் திடலை வந்தடைந்தது. ஊர்வலத்தில் மாணவ- மாணவிகள், ஓட்டுனர் பயிற்சி பள்ளி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திய படி சென்று பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவ்ராஜ், முதுநிலை மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபாகர், அரியலூர் கிளை மேலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று பெரம்பலூர் பாலக்கரையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். மருதராஜா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தமிழ்ச்செல்வன், ராமச்சந்திரன் ஆகியோர் பேசினர். ஊர்வலத்தில் கல்லூரி மாணவ- மாணவிகள், அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு சாலை விதிகளை முறையாக பின்பற்றவும், வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது, மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது, தலைக்கவசம் உயிர்கவசம், படியில் பயணம் நொடியில் மரணம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பாலக்கரையில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் ரோவர் ஆர்ச்சில் முடிவடைந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, திட்ட இயக்குனர் ஸ்ரீதர், வட்டார போக்குவரத்து அலுவலர்(பொறுப்பு) தேவராஜ், அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்