அய்யங்கொல்லி, படச்சேரி பகுதிகளில் பலத்த காற்றுக்கு மரம் விழுந்ததால் வீடு சேதம்

அய்யங்கொல்லி, படச்சேரி பகுதிகளில் பலத்த காற்றுக்கு மரம் விழுந்ததால் வீடு சேதம் அடைந்தது. வாழைகள் முறிந்து விழுந்தன.

Update: 2018-04-23 21:30 GMT
பந்தலூர்,

பந்தலூர் தாலுகாவில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நிலவி வந்த வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு பாட்டவயல், பிதிர்காடு, முள்ளன்வயல், வெள்ளேரி உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இதில் ஏராளமான வாழைகள் காற்றில் முறிந்து விழுந்தன. இதேபோல் நேற்று முன்தினம் கொளப்பள்ளி பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் வீடுகள், கடைகளின் மேற்கூரைகள் பறந்தன. இந்த நிலையில் படச்சேரி பகுதியில் இரவு 7 மணிக்கு பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதில் அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் என்ற விவசாயி பயிரிட்ட வாழைகள் காற்றில் முறிந்தது.

இன்னும் 2 மாதங்களில் வாழைத்தார்கள் விளைந்து அறுவடை செய்ய இருந்த நிலையில் பலத்த காற்றில் வாழைகள் முறிந்து விழுந்தன. இதில் சுமார் 1,500 வாழைகள் சேதம் அடைந்தது. இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக விவசாயி தமிழ்செல்வன் கண்ணீருடன் கூறினார். இதனால் வாங்கிய கடனை எப்படி செலுத்துவது என தெரியவில்லை என அவர் புலம்பினார்.

எனவே பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீட்டை சம்பந்தப்பட்ட துறையினர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதேபோல் அய்யங்கொல்லி அருகே குழிக்கடவு பகுதியில் குமாரன் என்பவரின் வீட்டின் மீது பாக்கு மரம் விழுந்தது. இதில் அவரது வீடு பலத்த சேதம் அடைந்தது. மேலும் கொளப்பள்ளி அங்கன்வாடி மையம், ஊராட்சிக்கு சொந்தமான கழிப்பறை கட்டிடங்கள் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

இதில் அந்த கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி, கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், பொறியாளர் கிருஷ்ணபிரசாத், கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 4.30 மணிக்கு கூடலூர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. அரை மணி நேரம் மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் குளிர்ந்த கால நிலை நிலவியது. 

மேலும் செய்திகள்