குளிக்க சென்றபோது அணையில் மூழ்கி கோவையை சேர்ந்த 2 சிறுவர்கள் பலி

குளிக்க சென்றபோது வாளையார் அணையில் மூழ்கி கோவையை சேர்ந்த 2 சிறுவர்கள் பரிதாபமாக இறந்தனர்.;

Update:2018-04-24 03:45 IST
போத்தனூர்,

கோவைப்புதூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த பானு என்பவரது மகன் அப்துல்லா (வயது 17), அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் சூர்யன் (17). நண்பர்களான இவர்கள் 2 பேரும் கோவையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும் தமிழக-கேரள எல்லையான வாளையாருக்கு சென்றனர். பின்னர் அங்குள்ள அணையில் 2 பேரும் குளித்தனர். எதிர்பாராதவிதமாக அவர் கள் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில், நீரில் மூழ்கிய அவர்கள் காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாளையார் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் வாளையார் அணையில் மூழ்கிய சிறுவர்களின் உடல்களை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இதற்கிடையே இரவு நேரமாகி விட்டதால் அவர்களின் உடல்களை தேடும் பணி நிறுத்தப்பட்டது. நேற்று மீண்டும் உடல்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. பின்னர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து வாளையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாளையார் அணைக்கு குளிக்க சென்ற சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் கோவைப்புதூர் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே அணையில் மூழ்கி கோவையை சேர்ந்த 3 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்