கோத்தகிரி இ-சேவை மையத்தில் ஸ்மார்ட் கார்டு அட்டை இருப்பு இல்லாததால் பொதுமக்கள் அவதி

கோத்தகிரி இ-சேவை மையத்தில் ஸ்மார்ட் கார்டு அட்டை இருப்பு இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

Update: 2018-04-23 22:15 GMT
கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தம் 63 நியாயவிலை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் 25 ஆயிரத்து 548 குடும்ப அட்டைகள் பதிவு செய்யப்பட்டு அதில் 83 ஆயிரத்து 664 பேர் குடும்ப உறுப்பினர்களாக உள்ளனர். தமிழக அரசு பழைய குடும்ப அடைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

பொதுமக்கள் தங்களது ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி நியாய விலை கடைகளில் உள்ள மின்னணு எந்திரம் மூலம் ஸ்கேன் செய்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி வந்தனர். பெரும்பாலான ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டைகள் மின்னணு எந்திரம் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டாலும் ஒரு சில ஸ்மார்ட் கார்டுகள் ஸ்கேன் ஆகவில்லை. இதனால் அவற்றிற்கு பதிலாக புதிய ஸ்மார்ட் கார்டு அட்டைகளை தமிழக அரசு கேபிள் நிறுவனம் மூலம் இயங்கி வரும் இ-சேவை மையத்தில் மாற்று கார்டு பெற விண்ணப்பித்து கார்டை மாற்றி கொண்டு வருமாறு நியாய விலைக்கடை அலுவலர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வந்தனர்.

இது மட்டுமின்றி தினமும் கூலி வேலைக்கு செல்வோர் தங்களது ஸ்மார்ட் கார்டை மாற்றுவதற்காக வேலைக்கு விடுமுறை எடுத்து இ-சேவை மையத்திற்கு வந்து செல்கிறார்கள். இங்கு ஸ்மார்ட் கார்டு அட்டை இருப்பு இல்லை என அலுவலர்கள் கூறுவதால் ஏமாற்றுத்துடன் திரும்பி செல்கின்றனர். இது குறித்து இ-சேவை மைய அலுவலர்கள் கூறும் போது:-

ஸ்மார்ட் கார்டு இருப்பு இல்லாததால் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இது குறித்து சென்னை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து விட்டோம். ஆனால் இன்னும் ஸ்மார்ட் கார்டு அட்டையை அவர்கள் அனுப்பி வைக்கவில்லை. எப்படியும் ஸ்மார்ட் கார்டு அட்டைகள் வருவதற்கு ஒரு மாதம் ஆகும் என்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான இ-சேவை மையங்கள் உள்ளன. அனைத்து இடங்களிலும் ஸ்மார்ட் கார்டு அட்டைகள் தட்டுப்பாடு இருக்கிறதா? இல்லையே. எனவே தட்டுப்பாடு உள்ள இடங்களுக்கு ஸ்மார்ட் கார்டு அட்டைகளை விரைந்து அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து 3 மாதங்கள் ரேஷன்கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்காவிட்டால் ஸ்மார்ட் கார்டு ரத்து ஆகும் என்று கூறுவதால் நகல் ஸ்மார்ட் கார்டாவது கிடைக்குமா? என்று போராடி வருகிறோம். ஆனால் இங்கு இருப்பு இல்லை என்று கூறி தினமும் நாளை கடத்துகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தட்டுப்பாடு இன்றி ஸ்மார்ட் கார்டு இருப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது குறித்து கோத்தகிரி தாசில்தார் அலுவலக வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பதிவு செய்துள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த கார்டில் கீறல்கள் விழுவதால் மின்னணு எந்திரத்தில் ஸ்கேன் செய்ய முடிவதில்லை.

எனவே இ-சேவை மையம் மூலம் புதிய ஸ்மார்ட் கார்டு பெற்று கொள்ள பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இ-சேவை மையத்தில் கடந்த சில மாதங்களாக ஸ்மார்ட் கார்டு அட்டை இருப்பு முற்றிலுமாக இல்லாததால் தான் பொதுமக்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். எனவே ஸ்மார்ட் கார்டு இருப்பு வைப்பதற்கான நடவடிக்கையை அரசு கேபிள் டி.வி. நிர்வாக தாசில்தார் தான் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்