அனைவருக்கும் வீடு திட்டத்தில் அந்தந்த நகராட்சி - பேரூராட்சிகளில் விண்ணப்பங்கள் பெறலாம், கலெக்டர் உத்தரவு

அனைவருக்கும் வீடு திட்டத்தில் அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் எஸ்.பிரபாகர் உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2018-04-23 22:00 GMT
ஈரோடு,

பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ஆட்சேபகரமான அரசு நிலங்களில் ஆக்கிரமித்து குடியிருந்து வரும் குடிசை வாசிகளை மறுகுடியமர்வு செய்யவும், நகர்ப்புறங்களில் உள்ள வீடு இல்லாத ஏழைகள் குடியமர்வு செய்யவும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புறங்களில் ஆக்கிரமிப்பு பகுதிகளில் குடியிருந்து வரும் பொதுமக்கள் அனைவருக்கும் வீடு திட்டத்தில் விண்ணப்பிக்க கோரி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்கள் விண்ணப்பங்கள் கொடுக்க வந்தால் அந்தந்த அலுவலகங்களிலேயே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் எஸ்.பிரபாகர் உத்தரவிட்டு உள்ளார்.

நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய கலெக்டர் எஸ்.பிரபாகர் பேசும்போது கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இதற்கு வீட்டு மனை மற்றும் வீடுகள் சொந்தமாக இல்லாத ஏழைகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஈரோடு மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் இந்த விண்ணப்பங்களை பெற வேண்டும். பொதுமக்கள் விண்ணப்பங்கள் வழங்க வரும்போது, கலெக்டர் அலுவலகத்தில்தான் கொடுக்க வேண்டும் என்று கூறி பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது. அந்தந்த அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை வாங்கி, சரிபார்த்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் எஸ்.பிரபாகர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், அவர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் இலவச வீட்டு மனை பெற விண்ணப்பித்தவர்களின் பட்டியல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் பதிவு செய்து பராமரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

அவர்களுக்கு கிராமப்புறங்களை சேர்ந்தவர்களை தவிர, நகர்ப்புறங்களை சேர்ந்தவர்களுக்கு அனைவருக்கும் வீடு திட்டத்தில் விண்ணப்பிக்க நினைவூட்டல் கடிதம் அனுப்ப வேண்டும்.

இதற்கான நடவடிக்கைகளை தாசில்தார்கள் மேற்கொள்ள வேண்டும். இதுபோல் ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் வீட்டுமனை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் கவனிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.

மேலும் செய்திகள்