கோலார் மாவட்டத்தில் டி.கே.ரவியின் தாய் கவுரம்மா உள்பட 47 பேர் வேட்புமனு தாக்கல்

கர்நாடக சட்டசபை அடுத்த மாதம்(மே) 12-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. கோலார் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் டி.கே.ரவியின் தாய் கவுரம்மா உள்பட 47 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Update: 2018-04-23 23:00 GMT
கோலார் தங்கவயல்,

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம்(மே) 12-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. இன்று(செவ்வாய்க் கிழமை) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

இந்த நிலையில் நேற்று கோலார் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் மறைந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவியின் தாய் கவுரம்மா, நம்ம காங்கிரஸ் கட்சியின் தலைவரும், சுயேச்சை வேட்பாளருமான வர்த்தூர் பிரகாஷ், ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் சீனிவாசகவுடா எம்.எல்.ஏ. ஆகியோர் கோலார் தாலுகா அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதேப்போல் கோலார் தங்கவயல் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் குணசேகரன், ரீ பப்ளிக் சேனா கட்சியின் சார்பில் போட்டியிடும் முருகேஷ், சுயேச்சை வேட்பாளர் லலிதா, எம்.இ.பி. கட்சியின் சார்பில் களம் காணும் ராஜப்பா, நம்ம காங்கிரஸ் வேட்பாளர் அருண் பிரசாத் ஆகிய 5 பேரும் கோலார் தங்கவயல் நகரசபை அலுவலகத்தில் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

மேலும் மாலூர் தொகுதியில் முன்னாள் மந்திரி கிருஷ்ணய்யஷெட்டி பா.ஜனதா சார்பில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்தார். மேலும் அதே தொகுதியில் பா.ஜனதா சார்பில் மாற்று வேட்பாளராக கிருஷ்ணய்யஷெட்டியின் மனைவியும், மருமகனும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

முல்பாகலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட தற்போதைய எம்.எல்.ஏ. கொத்தூர் மஞ்சுநாத் வேட்புமனு தாக்கல் செய்தார். பங்காருபேட்டையில் எம்.இ.பி. கட்சி சார்பில் போட்டியிட மரகல் சீனிவாஸ் வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் வேட்புமனு தாக்கல் செய்ய மாட்டு வண்டியில் வந்து அசத்தினார்.

இவர்கள் 13 பேர் உள்பட நேற்று கோலார் மாவட்டத்தில் ஒரேநாளில் 47 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்