மரக்காணம் அருகே தறிகெட்டு ஓடிய வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது
மரக்காணம் அருகே தறிகெட்டு ஓடிய வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
பிரம்மதேசம்,
புதுச்சேரி மாநிலம் சின்னகோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 36). இவர் சென்னையில் உள்ள தனது சகோதரி மகள் மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக அதே பகுதியை சேர்ந்த 25 பேருடன் நேற்று மதியம் ஒரு வேனில் சென்னைக்கு புறப்பட்டார். வேனை மயிலத்தை சேர்ந்த பிரபு(28) என்பவர் ஓட்டினார்.
மரக்காணத்தை அடுத்த தாழங்காடு மேம்பாலத்தின் அருகில் சென்ற போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் டிரைவர் பிரபு, மோகன், பாஸ்கர்(42), அமுதா உள்ளிட்ட 8 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் படுகாயமடைந்த 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தொடர்ந்து விபத்து குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.