மக்கள் நீதிமன்றத்தில் 1,974 வழக்குகளுக்கு தீர்வு

வேலூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 1,974 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

Update: 2018-04-22 23:25 GMT
வேலூர்,

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு தாலுகாக்களில் உள்ள நீதிமன்றங்களில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நேற்று நடந்தது. வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆனந்தி தலைமை தாங்கினார்.

நீதிபதிகள் செல்வசுந்தரி, லதா, அருண்குமார், அன்வர் சதார்த், ராஜசிம்மவர்மன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அஜூம், மாஜிஸ்திரேட்டுஅலிசியா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

வேலூரை அடுத்த ஸ்ரீபுரத்தை சேர்ந்த கூலிதொழிலாளி முருகன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் அருகே நடந்து சென்றபோது தனியார் பஸ் மோதி உயிரிழந்தார். அவருடைய மனைவி செல்வராணிக்கு விபத்து இழப்பீடாக ரூ.12 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட நீதிபதி ஆனந்தி வழங்கினார்.

முன்னதாக நீதிபதி ஆனந்தி, வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு கட்டிடத்தில் ‘அன்பு சுவடுகள்’ பெயர் பலகையை திறந்து வைத்தார். இதில், பிறருக்கு உதவும் மனம் படைத்தவர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை ஏழை, எளிய மக்களுக்காக வைத்து உதவி செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கு, வங்கி வராக்கடன், வங்கி காசோலை தொடர்பான வழக்கு, உரிமையியல் வழக்குகள் என நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தது மற்றும் மக்கள் நீதிமன்றம் எடுத்துக்கொண்ட வழக்குகள் என மொத்தம் 9 ஆயிரத்து 714 வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 1,974 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

இதன் மூலம் ரூ.9 கோடியே 79 லட்சத்து 85 ஆயிரத்து 590 வழங்க உத்தரவிடப்பட்டது. 

மேலும் செய்திகள்